கொரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடியில் சிறப்புத் திட்டம்: கேரளா அறிவிப்பு

கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ள மாநிலத்தில் மேலும் நான்கு பரிசோதனை மையங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடியில் சிறப்புத் திட்டம்: கேரளா அறிவிப்பு

கொரோனா தங்களது பொருளாதாரத்தை அழித்துவிட்டது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடியில் சிறப்பு திட்டம்
  • கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
  • வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
Thiruvananthapuram:

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.  

கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட அந்த நபர், வடக்கு காசராகோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் துபாயிலிருந்து திரும்பி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் வகையில், ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கிச் சிறப்புத் திட்டத்தைக் கேரள அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் அறிவித்த பல கோடி சிறப்புப் பொருளாதார திட்டத்தில், வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதார திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலை உறுதி திட்டத்தைச் செயல்படுத்த 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கான நலத்திட்ட ஓய்வூதியத்தை இந்த மாதமே வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. நலத்திட்டம் ஓய்வூதியம் பெற தகுதியில்லாத குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க 1,320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்க ரூ.100 கோடியும், 20 ரூபாய் மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா தங்களது பொருளாதாரத்தை அழித்துவிட்டது என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

கேரளாவில் இதுவரை மொத்தம் 2,921 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 2,342 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது, 170க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,000க்கும் அதிகமானோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில், முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மூன்று பேரும் தற்போது, முற்றிலும் குணமடைந்து தங்களது வழக்கமான வாழ்க்கை முறைக்குத் திரும்பியுள்ளனர். 

தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன் தனது செய்தியாளர் சந்திப்பின் போது, மாநிலத்தில் பல்வேறு பாதுகாப்புத்துறைத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாகவும் அவர்கள் அனைத்து உதவிகளையும் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது மருத்துவமனை, மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர் என்று அவர் கூறினார்.