This Article is From Apr 08, 2019

சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளி தஷ்வந்த்திற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை!

சென்னை மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை தஷ்வந்த் என்ற இளைஞர் கடத்தி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தார்.

இதையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், கடந்த ஜனவரி 2-ந் தேதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தனது தாயை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை திருடிக்கொண்டு மும்பைக்கு தப்பி சென்றுவிட்டார். பின்னர் டிசம்பர் 6-ம் தேதி மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து, சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை விதித்திருந்தது. ஆனால், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில், தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதனை அடுத்து உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, தஷ்வந்த் குற்றவாளி என்பதை உச்சநீதிமன்றம் ஏற்பதாக கூறியது.

தஷ்வந்துக்கு ஆயுள் தண்டனையாக இருந்திருந்தால் நிச்சயம் மனுவை தள்ளுபடி செய்திருப்போம், ஆனால் தூக்குதண்டனை என்ற ஒரே காரணத்துக்காக, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

இதனையடுத்து தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்குத் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

.