This Article is From Jan 25, 2020

'ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்' - அமெரிக்கா

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ், குடியுரிமை சட்ட திருத்தம் தீவிர ஜனநாயக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

'ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்' - அமெரிக்கா

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

New Delhi:

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அவர்கள் மீது எந்தவித வழக்கும் போடக் கூடாது என்றும் அமெரிக்கா தரப்பில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களை கவனிக்கும் அமெரிக்காவின் வெளியுறவு இணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது-

ஜம்மு காஷ்மீரில் பகுதியளவு இன்டர்நெட் சேவை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோன்று வெளிநாட்டு பிரதிநிதிகள் காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதுவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைதான். 

ஜம்மு காஷ்மீருக்கு வழக்கமாக வந்து செல்லக்கூடிய அளவுக்கு இந்திய அரசு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். அங்கு கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக் கூடாது.
இவ்வாறு ஆலிஸ் தெரிவித்தார். 

இம்மாத தொடக்கத்தில் 15 வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக இந்த சுற்றுப்பயணத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும், சுதந்திரமாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படாததால் சில ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த பயணத்தை தவிர்த்தனர். 

பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோரை சந்திப்பதற்கு வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தலைவர்கள் வீட்டுச் சிறையில் உள்ளனர். 
அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாகவும் பேட்டி அளித்திருக்கிறார். இந்த சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்திலிருந்து 2015-க்கு முன்பு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமையை வழங்குகிறத. இந்த சட்டம் பாகுபாடு காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இந்த சட்டம் குறித்து ஆலிஸ் வெல்ஸ் 'எனது இந்திய பயணம் இங்கு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களைப் புரிந்து கொள்ளவும் உதவியுள்ளது. வீதிகள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சட்டம் மிகுந்த விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்' என்று தெரிவித்தார். 

என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இணைந்து குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இவை முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இருப்பினும் குடியுரிமை சட்ட திருத்தம், மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க உதவும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

.