This Article is From Mar 03, 2020

”இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை போல”: முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்!

கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும்.

முஸ்தஃபாபாத்தின் ஈட்காவில் உள்ள முகாமில் அயிஷ் முகமது தஞ்சம் புகுந்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி வடகிழக்கு பகுதியில் அயிஷ் முகமது வீடு உள்ளது.
  • வீட்டில் மிச்சம் உள்ள பொருட்களை எடுத்துச்செல்ல அவர் அங்கு உள்ளார்.
  • டெல்லி வன்முறையை விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
New Delhi:

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 22 ஆண்டுகளாக பணியாற்றி 2002ஆம் ஆண்டில் தலைமைக் காவலராக ஓய்வு பெற்றவர் அயிஷ் முகமது (58), தற்போது வடகிழக்கு டெல்லியில் ஒரு தற்காலிக நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்துள்ள அவரது நிலைமையைப் புரிந்துகொள்வது கடினம் தான். 

கடந்த வாரம் டெல்லியில் ஏற்பட்ட பெரும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் அயிஷ் முகமதும் ஒருவர் ஆவார். தற்போது, முஸ்தஃபாபாத்தின் ஈட்காவில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் அயிஷ் முகமது தஞ்சம் புகுந்துள்ளார். 

கடந்த 25ம் தேதி நடந்த கலவரத்தில் பாகீரதி விஹார் அருகில் உள்ள அயிஷ் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அயிஷ் முகமது என்டிடிவியிடம் கூறும்போது, வன்முறையாளர்கள் 200 முதல் 300 பேர் வந்தனர். அவர்கள் கல் வீச்சிலும், துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டதோடு, வீட்டிற்கும் தீ வைத்தனர். அப்போது, எனது மகனுடன் வீட்டினுள் இருந்த நான், மொட்டை மாடி வழியாகப் பக்கத்து வீட்டில் குதித்துத் தப்பித்துச் சென்றோம். வரும் மார்ச் 29ம் தேதி எனது சகோதரி மகளின் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளையும் அவர்கள் திருடிச்சென்று விட்டனர் என்று அவர் கூறினார். 

புலந்தசரில் உள்ள தனது சொந்த ஊருக்கு முகமது தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் அனுப்பி வைத்துவிட்டார். அவரது வீட்டின் முதல் தளம் வரை எரிந்ததால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது 2 இருசக்கர வாகனங்களும் எரிந்தன. மிஞ்சியுள்ள பொருட்களைப் பத்திரப்படுத்துவதற்காக அவர் மட்டும் தற்போது இங்குத் தங்கியுள்ளார். 

1991ல் காஷ்மீரில் சேவையாற்றிய போது, பலத்த காயமடைந்துள்ளேன். தற்போது, இந்த கலவரத்தின் மூலம் இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை என்பது போல உள்ளது என்றார் உருக்கமாக. 

கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும். 

4 நாட்களுக்கும் மேலாக வன்முறையாளர்கள் இரும்பு கம்பிகளுடனும், ஹாக்கி மட்டைகளுடனும், கற்களுடன் சாலைகளைச் சுற்றி வந்தனர். அவர்கள் பல வீடுகள், கட்டிடங்களுக்குத் தீவைத்து எரித்தனர். இந்த வன்முறையில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டு சடலங்கள் பகீராதி விஹார் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்டன. 

இந்த வன்முறை குறித்து விசாரிக்க டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் கீழ் இரண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாகக் கடந்த வாரம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதேபோல், வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

.