This Article is From Jan 18, 2020

“சிஏஏ விவகாரத்தில் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் கருத்து முரண்..!”- சத்தீஸ்கர் முதல்வர் பகீர்

சிஏஏவுடன் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சியும் இணைந்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மாறும் என்று இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர்bara

“சிஏஏ விவகாரத்தில் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் கருத்து முரண்..!”- சத்தீஸ்கர் முதல்வர் பகீர்

தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் என்பிஆர் பணிகளை பல மாநில அரசுகள் கிடப்பில் போட்டுள்ளன

ஹைலைட்ஸ்

  • 'Amit Shah சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் எல்லாம் தொடர்புடையது என்கிறார்'
  • 'பிரதமர் மோடி என்ஆர்சி அமல் செய்யப்படாது என்கிறார்'
  • 'இருவரின் முரணால் நாடு கஷ்டப்படுகிறது'
Raipur:

சத்தீஸ்கர் மாநில முதல்வரான பூபேஷ் பாகல், “பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இடையில் குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தைப் பொறுத்த வரையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிகிறது,” என்று அதிர்ச்சியளிக்கும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிஏஏ, என்பிஆர், என்சிஆர் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று சொல்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, என்சிஆர் நாட்டில் நடைமுறைபடுத்தப்படாது என்கிறார். இங்கு யார் உண்மையைச் சொல்கிறார். யார் பொய் சொல்கிறார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிகிறது. அவர்களால் நாடு கஷ்டப்படுகிறது,” என்று ராய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகல் பேசியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

பாகல், மத்திய அரசு மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தப் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார். “பாஜகவின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிமுறை அமல் செய்யப்பட்டது. இது நரேந்திர மோடியின் முடிவாக தெரிந்தது. ஆனால் கடந்த 7, 8 மாதங்களாக அனைத்து முடிவுகளும் அமித்ஷாவால் எடுக்கப்படுகிறது. அவர்தான் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தார். சிஏஏ-வைக் கொண்டு வந்தார். தற்போது என்பிஆர்-ஐ அமல் செய்யப் பார்க்கிறார். நாட்டின் ஏழை மக்கள் எப்படி அவர்களின் குடியுரிமை நிரூபிக்க ஆவணங்களைத் தாக்கல் செய்வார்கள்,” என்று கேள்வி எழுப்பினார் பாகல்.

என்பிஆர் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தால், அதில் தான் கையெழுத்திடப் போவதில்லை என்பதையும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் முதல்வர் பாகல்.

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து மத ஒடுக்குமுறையால் இந்தியாவுக்கு வந்த, முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது என்றும் மதப் பாகுபாடு காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன.

சிஏஏவுடன் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சியும் இணைந்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மாறும் என்று இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை கொடுக்க உதவும் என்கிறது மத்திய அரசு தரப்பு. 

சிஏஏ, என்ஆர்சி இரண்டும் நாடு முழுவதும் அமலுக்கு வரும் நிலையில், பல லட்சம் முஸ்லிம்கள் தங்களது குடியுரிமையை இழக்க நேரிடும் என்று இந்தச் சட்டங்களை எதிர்ப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின்போதே அமித்ஷா பேசியதாகவும் கூறுகின்றனர். ஆனால், என்ஆர்சி அமல் செய்ய வாய்ப்பில்லை என்றுதான் பிரதமர் மோடி சொல்லி வருகிறார்.

தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் என்பிஆர் பணிகளை பல மாநில அரசுகள் கிடப்பில் போட்டுள்ளன. என்பிஆர் மூலம் என்சிஆர் தயாரிக்கப்படும் என்று மாநில அரசுகள் நினைப்பதால், பணியை நிறுத்தி வைத்துள்ளனர். 

(With inputs from ANI)

.