
சாலையில் விழுந்து நொறுங்கும் கார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து கார் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஐதரபாத்தின் கச்சிபோலி பகுதியில் இந்த சம்பவம் இன்று மதியம் 1 மணிக்கு நடந்துள்ளது. இங்கு புதிதாக பாலம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதன் வழியே ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் செல்கின்றன.
இந்த நிலையில் இன்று மதியம் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, பாலத்திலிருந்து விலகிச்சென்று அருகில் உள்ள சாலையில் விழுந்தது. பாலத்திலிருந்து கார் பறந்து வரும்போது, அதன் நிழல் சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த 21 வினாடி வீடியோ காண்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
.
A #Volkswagen flew off newly opened #BiodiversityFlyover and fell on people standing below; car was travelling at 104 kmph; woman killed, driver survived thanks to airbags, 4 injured; 2 new cars parked below also damaged; footage cinematic, dramatic reality is frightening @ndtvpic.twitter.com/YNRAdxQEGs
— Uma Sudhir (@umasudhir) November 23, 2019
சாலையில் கார் விழுந்தபோது அதில் இருந்த ஏர் பேக் உடனடியாக செயல்பட்டதால் டிரைவர் உயிர் பிழைத்தார். சாலையோரம் ஆட்டோ ரிக்சாவுக்காக தனது மகளுடன் காத்திருந்த பெண் ஒருவர், கார் மோதி உயிரிழந்தார்.
கார் 104 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இங்கு அதிகபட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லத்தான் அனுமதி இருக்கிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலத்தை 3 நாட்களுக்கு பூட்டப்பட்டிருக்கும் என்றும், அதற்குள்ளாக வேகத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பாலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் ஐதராபாத் மேயர் போந்து ராம் மோகன் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.