This Article is From Mar 13, 2020

பெங்களூரில் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு!!

இதைத்தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படி பணி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு!!

அந்த நபர் அலுவலகத்தில் சிறிது நேரம் இருந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்டுள்ள நபர் பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
  • 26வயது இளைஞர் கிரீஸ் சென்று திரும்பியுள்ளார்.
Bangalore:

பெங்களூரில் கூகுள் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 வயதான அந்த இளைஞர் அண்மையில் கிரீஸ் சென்று திரும்பியுள்ளார். தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். 

பாதிப்பு ஏற்பட்டுள்ள அந்த நபர் அலுவலகத்தில் சிறிது நேரம் இருந்ததாகக் கூகுள் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூர் அலுவலகத்தில் உள்ள எங்கள் ஊழியருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அறிகுறிகளும் இல்லாததற்கு முன்பு அவர் பெங்களூரில் உள்ள எங்கள் அலுவலகம் ஒன்றில் சில மணி நேரம் இருந்து சென்றுள்ளார். கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படி பணி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த நபருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் தனிப்பட்ட முறையில் அவர்களே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். 

பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் வீட்டிலிருந்து பணி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல் மற்றும் மைண்ட்ரீ நிறுவனங்களைத் தொடர்ந்து, மூன்றாவதாகத் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. 76 வயது முதியவர் அண்மையில் சவுதி அரேபியா சென்று திரும்பியுள்ளார். அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. 

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த கூகுள் நிறுவன ஊழியருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாசலு கூறும்போது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. எனினும், அவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்தி இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

அந்த நபருக்குக் காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் இல்லாத காரணத்தினால், அவர் கூகுள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் உடல்நலம் சரியில்லாததால், அவர் மருத்துவனிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது திருமணத்தை முடித்து அந்த நபர் கிரீஸ் சென்று திரும்பியுள்ளார். அவர் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிய போது, பயணித்த கால்டாக்சி டிரைவரும் கண்டறியப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இதுவரை 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

.