This Article is From May 27, 2019

“பாஜக அதைத் தொட்டுப் பார்க்கட்டும்... புரட்சி வெடிக்கும்!”- எச்சரிக்கும் ஜெயக்குமார் எம்.பி., #Exclusive

"பாஜக வெற்றி பெறும் சூழலிலேயே இருக்கவில்லை. ஆனால், ஊடகங்கள்கள்தான் 300 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்று பிரசாரம் செய்தன"

“பாஜக அதைத் தொட்டுப் பார்க்கட்டும்... புரட்சி வெடிக்கும்!”- எச்சரிக்கும் ஜெயக்குமார் எம்.பி., #Exclusive

‘ஆபரேஷன் சக்சஸ் பட் பேஷன்ட் டெட் என்பது போல ஆகிவிட்டதே காங்கிரஸ் நிலைமை’

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக நாடாளுமன்றப் படிகளில் ஏற உள்ளார் ஜெயக்குமார் எம்.பி. திருவள்ளூர் தொகுதியில் இவர் களமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து பல ஊடகங்களும் தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், ‘ஜெயக்குமாருக்கு ஜெயம் வருவது கஷ்டம்தான்' என்று ஆருடம் சொல்லின. இதில் ‘ஒரு பிரபல நாளிதழ்', தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், ‘ஜெயக்குமாரின் நிலைமை மிகவும் பரிதாபம்' என்று கூறியது. இதனால் கொதிப்படைந்த மனிதர், நேராக அந்த நாளிதழின் அலுவலகத்துக்குச் சென்று, லெஃப்ட் அண்டு ரைட்டு வாங்கிவிட்டார். அவர் அங்கு பேசிய பேச்சு, கடந்த சில நாட்களாக இணைய வைரலாக இருக்கிறது.

அவரை சந்தித்து ‘கருத்துக் கணிப்பு விவகாரம்' உட்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். ‘ஆபரேஷன் சக்சஸ் பட் பேஷன்ட் டெட் என்பது போல ஆகிவிட்டதே காங்கிரஸ் நிலைமை' என்று கொளுத்திப் போட்டோம். “காங்கிஸ் கட்சி, வெற்றி தோல்விக்கெல்லாம் அப்பாற்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது காங்கிரஸ்தான். இந்த இயக்கம் அழிந்துவிட்டது, அஸ்தமனமாகிவிட்டது என்று சொல்வதெல்லாம் சுற்றப் பிதற்றல். நாங்கள் 52 எம்.பி-க்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்ல இருக்கிறோம். எங்களை பாஜக எப்படி எதிர்கொள்ள திணறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் கொதிப்புடன்.

2q8o3n3

‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்க உள்ளது. அவர்கள் நினைத்தால் எந்தச் சட்டத்தையும் கொண்டு வர முடியும். சட்ட சாசனத்தையே கூட மாற்றியமைக்க முடியும்…' என்று கேள்வியை முடிப்பதற்குள், “ஒரு வேளை பாஜக, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்ட சாசனம் மீது கை வைத்தால், புரட்சி வெடிக்கும்” என்றார் தீர்க்கமாக.

‘திருவள்ளூர் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' என்றோம். “திருவள்ளூரில் பல பிரச்னைகள் உள்ளன. நானும் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளேன். ஆனால், முதலில் தீர்க்கப் போவது மக்களின் தண்ணீர்ப் பிரச்னையைத்தான். அதற்குப் பிறகு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவேன்” என்று கூறினார்.

‘அந்த நாளிதழ் விவகாரம் பற்றி…', (சிரித்துக்கொண்டே), “தேர்தல் முடிந்த அடுத்த நாள் நான் பெரு வாரியான ஓட்டு வித்தியாசத்தில் தோற்பேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தேன். அதான் கோபப்பட்டேன். என்ன கருத்துக் கணிப்பு நடத்துகிறார்கள். வெங்காயக் கருத்துக் கணிப்பு.

f9kgrfoo

பாஜக வெற்றி பெறும் சூழலிலேயே இருக்கவில்லை. ஆனால், ஊடகங்கள்கள்தான் 300 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்று பிரசாரம் செய்தன. இதனால், பாஜக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சுலபமாக முறைகேடு செய்துவிட்டது” என்றவரிடம்,

‘நீங்கள் ஜெயித்த தமிழகத்திலும், கேரளாவிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் முறைகேடு நடந்திருக்கிறது என்கிறீர்களா?' என்றோம். “தமிழகத்தில் பாஜக-வுக்கு வாக்கு சதவிகிதமே இல்லை. இங்கு இ.வி.எம் இயந்திரங்களில் முறைகேடு செய்தால், அது அப்பட்டமாக தெரியும். ஆனால் அவர்கள் வலுவாக இருக்கும் இடங்களில் அப்படிச் செய்தால், மக்களும் நம்பிவிடுவார்கள். இ.வி.எம் இயந்திரங்களால் தேர்தலின் நம்பகத்தன்மையே குலைந்துவிட்டது. அதை தூக்கியெறிய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதை ஒழிப்பதுதான் இந்த முறை நாடாளுமன்றத்தில் எங்களின் பிரதானப் பணியாக இருக்கும்” என்று முடித்தார்.

.