This Article is From Feb 22, 2019

27 அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

27 அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில், தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. அத்துடன் தேர்தல் நேரத்தில் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும் கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுவாக தேர்தல் நடப்பதற்கு முன்பு தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.

அதன்படி 27 அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியுள்ளது. கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அந்த கட்சி போட்டியிடாத தொகுதிகளில் பொது பட்டியலில்தான் இருக்கும். அத்துடன் இக்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிகளிலுள்ள எண்ணிக்கைக்கு குறைவாக வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் திரும்ப பெறப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


 

.