மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. கூட்டணியில் சீட் கேட்டு பிச்சை எடுப்பதை விட தனித்து நின்று போட்டியிடலாம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
இந்த நிலையில் கூட்டணி விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
நடைபெறவுள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தது 4 மாநிலங்களிலாவது வெற்றி பெற்று விடும். சட்டசபை தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் கூட்டணி என்பது வித்தியாசப்படும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைப்பது என்பதுதான் எங்களுடைய இலக்கு. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கும், பாஜகவுககும்தான் வாக்குகள் உள்ளன. நிச்சயமாக நாங்கள் மிசோரமில் வெற்றி பெற்று விடுவோம்.
மக்களவை தேர்தல் கூட்டணியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இடம்பெறுவார்கள். எங்களது கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்பதை காலம்தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.