This Article is From Feb 09, 2020

‘வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது’ – கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தல் முடிந்து சுமார் 22 மணி நேரம் கடந்த பின்னரும், எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை தேர்தல் ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை.

‘வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது’ – கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அதிர்ச்சி அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘உண்மையிலேயே அதிர்ச்சியாக உள்ளது. தேர்தல் ஆணையம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது? தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆன பின்னரும், இன்னமும் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை வெளியிடாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.

தேர்தல் முடிந்து சுமார் 22 மணி நேரங்களை கடந்த நிலையிலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை. டெல்லி சட்டமன்ற தேர்தலில் 1.47 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.

வழக்கத்தை விட டெல்லி சட்டமன்ற தேர்தலில் நேற்று குறைவான வாக்குகளே பதிவானது. இறுதி கட்டத்தில் 57.06 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியானது. 2015- சட்டமன்ற தேர்தலில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவின் தேர்தல் ஆணையத்தின் ஸ்மார்ட் ஃபோன் ஆப்பில் வெளியான தகவல்களுக்கும், டெல்லியின் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்களுக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் காணப்பட்டன.

நேற்றிரவு தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஷைபாலி சரன் 10:17 க்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அதில் 61.43 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற விவரம் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இதனால் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டிருக்குமோ என்று ஆம் ஆத்மி கட்சியினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த புகாரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்துள்ளார்கள்.

நேற்று டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதையொட்டி 2700 வாக்கு மையங்கள் மற்றும் 13 ஆயிரம் பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நீடித்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றே தெரிவிக்கின்றன.

கருத்துக்கணிப்புகளை மறுத்துள்ள டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தனது கட்சி 48 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தை யாரும் குறை சொல்லக் கூடாது என்று கூறியுள்ளார்.

நாளை மறுதினமான பிப்ரவரி 11 செவ்வாயன்று டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.  

.