This Article is From May 09, 2020

ரயில் ஏறி இறந்த 16 தொழிலாளர்கள்: ‘ஒரு போன் அழைப்பு காப்பாற்றியிருக்கும்’- எதிர்க்கட்சி வேதனை!

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த நிர்வாகியுமான திக் விஜய சிங், இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

ரயில் ஏறி இறந்த 16 தொழிலாளர்கள்: ‘ஒரு போன் அழைப்பு காப்பாற்றியிருக்கும்’- எதிர்க்கட்சி வேதனை!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்தான், மற்ற மாநிலங்களில் உள்ள தங்கள் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வரும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஹைலைட்ஸ்

  • கோவிட்-19 பரவலால் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது
  • இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
  • பலரும் தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர்
Bhopal:

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 16 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ரயில் ஏறி இறந்த விவகாரம், பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக இரு மாநில அரசுகளுக்கு இடையில் சரியான வகையில் தொடர்பு இருக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. 

கோவிட்-19 பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய பிரதேசத்திலிருந்து அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிற்கு சென்று சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர 31 சிறப்பு ரயில்களைக் கேட்டுள்ளது மத்திய பிரதேச அரசு. இப்படிப்பட்ட சூழலிலும் தங்களுக்கு ரயிலில் செல்வதற்கான சிறப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை என்று சொல்கின்றனர் மகாராஷ்டிராவில் இருக்கும் ம.பி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். 

மகாராஷ்டிராவின் ஜல்னா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணி செய்து வந்த ம.பி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர், கடந்த வியாழக் கிழமை இரவு 7 மணிக்கு சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளனர். சில கிலோ மீட்டர் நடந்த பிறகு அசதியில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஓய்வெடுத்துள்ளனர். அப்போது அந்த தடத்தில் வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது. இதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்திலிருந்து தப்பிய புலம் பெயர்ந்த தொழிலாளியான விரேந்திர சிங், “எங்கள் கிராமத்திற்குச் செல்ல நாங்கள் சிறப்புப் பயணச்சீட்டு கேட்டு விண்ணப்பித்திருந்தோம். ஆனால், அதை வாங்குவதற்கு மறந்துவிட்டோம். ஒரு வாரத்துக்கு முன்னர் நாங்கள் விண்ணப்பித்து இருந்தாலும், இதுவரை அது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை,” என்று வேதனைப்படுகிறார். 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்தான், மற்ற மாநிலங்களில் உள்ள தங்கள் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வரும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். 1994 பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான தீபாலி ரஸ்டோகிதான், மகாராஷ்டிராவிலிருந்து ம.பி-க்கு தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி. 

இந்நிலையில், மத்திய பிரேதேச எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஐஏஎஸ் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் எந்த உதவி கேட்டு போன் மூலம் அழைத்தாலும், அதை எடுப்பது கூட இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. 

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த நிர்வாகியுமான திக் விஜய சிங், இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 


 

.