This Article is From Dec 19, 2018

மோடி, பாஜக குறித்து விமர்சனம்: பத்திரிகையாளருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை!

மணிப்பூரில் செயல்பட்டு வந்த உள்ளூர் செய்தி சேனலான ஐஎஸ்டிவி-யின் பணியிலிருந்து சமீபத்தில்தான் வாங்கெம் வெளியேறியுள்ளார்.

மோடி, பாஜக குறித்து விமர்சனம்: பத்திரிகையாளருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை!

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக வாங்கெமின் குடும்பம், மேல்முறையீடு செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது (கோப்புப் படம்)

Imphal:

சமூக வலைதளங்களிக் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பாஜக-வை விமர்சனம் செய்த மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர், தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்குக் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தரப்பு, ‘மணிப்பூரைச் சேர்ந்த கிஷோர்சந்திரா வாங்கெம் என்பவர் கடந்த நவம்பர் 27-ல் கைது செய்யப்பட்டார். பொது அமைதியை குலைக்கும் விதத்தில் அவர் நடந்து கொண்டதால், அவர் கைது செய்யப்பட்டார்' என்று கூறியுள்ளது. வாங்கெம், தனது முகநூல் பக்கத்தில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து வீடியோ பதிவிட்டார்.

அந்த வீடியோவில் வாங்கெம், ‘பிரேன் சிங், மோடி அரசின் பொம்மையாக செயல்பட்டு வருகிறார். மணிப்பூருக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாம ராணி லக்ஷ்மிபாயின் பிறந்த நாளைக் கொண்டாட அரசு சார்பில் விழா எடுக்கப்படுகிறது. இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை முடிந்தால் கைது செய்து கொள்ளுங்கள்' என்று சவால் விடும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தான், வாங்கெமை அரசு, கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக வாங்கெமின் குடும்பம், மேல்முறையீடு செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மணிப்பூரில் செயல்பட்டு வந்த உள்ளூர் செய்தி சேனலான ஐஎஸ்டிவி-யின் பணியிலிருந்து சமீபத்தில்தான் வாங்கெம் வெளியேறியுள்ளார். அவர் அதைத் தொடர்ந்துதான் முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குள்ளான பதிவை போட்டுள்ளார் என்று தெரிகிறது.

வாங்கெமின் கைதை, இந்திய பிரஸ் கவுன்சிலும், இந்திய பத்திரிகையாளர்கள் சங்கமும் விமர்சித்துள்ளது. ஆனால் மணிப்பூர் பத்திரிகையாளர் சங்கம், வாங்கெமின் கைது குறித்து கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டது. அந்த அமைப்பு, ‘சமூக வலைதளங்களில் போட்ட ஒரு பதிவு இதழியலின் கீழ் வராது' என்று மட்டும் கருத்து தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்து, தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றன. அது பழைமைவாதச் சட்டம் எனவும், ஒடுக்குமுறையை ஏவ பயன்படுத்தப்படுகிறது எனவும் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

.