This Article is From Feb 09, 2019

ராஜஸ்தானில் ஒரே நாளில் 100 பேருக்கு பன்றிக் காய்ச்சல்; 2 நாளில் 9 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 100 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ராஜஸ்தானில், சுமார் 1,088 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. 

Jaipur:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 100 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 9 பேர் இந்த பாதிப்பால் இறந்துள்ளனர் என்றும் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. பன்றிக் காய்ச்சல் இப்படி திடீரென்று பரவி வருவதால் ராஜஸ்தான் அரசு, நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. 

பன்றிக் காய்ச்சல் பரவி வருவது குறித்து அம்மாநில மருத்துவர்கள், ‘இந்த ஆண்டு பருவ மழையை எதிர்பார்த்ததை விட அதிக நாட்களுக்கு பெய்தது. அதேபோல, குளிரின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. இது பன்றிக் காய்ச்சல் தொடர்பான வைரஸ் பரவுவதை அதிகப்படுத்தியுள்ளது' என்றுள்ளனர். கடந்த ஆண்டு ராஜஸ்தானில், சுமார் 1,088 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. 

இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா கூறுகையில், ‘எங்கள் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடி. அதில் 1 கோடி பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்று சோதித்துவிட்டோம். தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்கள், ரயில்வே நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன' என்று கூறியுள்ளார். 

தற்போது பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க, ராஜஸ்தானில் 12 மருத்துவமனைகளில்தான் உபகரணங்கள் இருக்கின்றன. எனவே, கிராமப்புறங்களில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நகரத்தில் இருக்கும் இந்த மருத்துவமனைக்கு வந்தாக வேண்டும். இதனால், காய்ச்சலின் தீவிரம் அதிகமடைந்து விடுகிறது.

இதை சரிகட்டும் வகையில் அரசு தரப்பு, ‘பன்றிக் காய்ச்சல் இருப்பதை சோதிக்க ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் நாங்கள் பரிசோதனை லேப் அமைக்க உள்ளோம். சோதனையை சீக்கிரம் செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட உபகரணங்களையும் நாங்கள் கொள்முதல் செய்து வருகிறோம்' என்று பதிலளித்துள்ளது.

.