சீனாவிலிருந்து அடுத்த ஆபத்து? - தொற்றாக பரவும் புதிய பன்றிக் காய்ச்சல் நோய் கண்டுபிடிப்பு

ஜி4 வைரஸ் ஏற்கனவே, பன்றி பராமரிப்பாளர்கள் 10.4 சதவீதம் பேரிடம் பரவி விட்டதாகவும், சோதனை மேற்கொண்டதில் 4.4. சதவீத பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிலிருந்து அடுத்த ஆபத்து? - தொற்றாக பரவும் புதிய பன்றிக் காய்ச்சல் நோய் கண்டுபிடிப்பு

ஜி4 வைரஸ் விலங்குகளிடம் இருந்து  மனிதர்களை சென்றடைந்து விட்டது.

ஹைலைட்ஸ்

  • ஜி4 என்ற புதிய அபாயகரமான பன்றி காய்ச்சல் சீனாவில் கண்டுபிடிப்பு
  • உலகம் முழுவதும் தொற்றாக பரவும் ஆற்றல் கொண்டது என தகவல்
  • ஜி4-க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சீன மருத்துவர்கள் தீவிரம்
Washington:

சீனாவிலிருந்து  உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால்  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அந்நாட்டில் தற்போது புதிய வகை பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.  இதற்கு உலகம் முழுவதும் தொற்றாக  பரவும் சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை  வெளியிட்டுள்ளனர்.

புதிய பன்றிக் காய்ச்சலுக்கு ஜி 4 என பெயரிட்டுள்ளார்கள். கடந்த 2009-ல்  எச்.1 என்.1 வைரஸ் தொற்றாக பல நாடுகளில் பரவியது.  இந்த வைரஸின் மரபணுவில் இருந்து  தற்போது ஜி4 எனப்படும் புதிய பன்றிக் காய்ச்சல் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜி4 வைரஸ், மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதாக சீன மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.  இது  சம்பந்தமாக சீனா உள்ளிட்ட பல நாடுகள் அலட்சியம் காட்டின.

இதனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, உயிர்கள் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவை தடுக்கும் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்த சூழலில் அடுத்த ஆபத்தாக ஜி4 வைரஸ் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.  சீனாவில் கடந்த 2011ம் ஆண்டு முதற்கொண்டு, பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொடர்பாக ஆயுவகள் நடைபெறுகின்றன. 

தற்போது கண்டறியப்பட்டுள்ள ஜி 4 வைரஸ், மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல், தும்மலை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கும். குறிப்பிடும் வகையில் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, ஜி 4 வைரஸிடம் இருந்து பாதுகாப்பை அளிக்காது என்று சோதனையின் முடிவுகள் தெரிவிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

ஜி4 வைரஸ் ஏற்கனவே, பன்றி பராமரிப்பாளர்கள் 10.4 சதவீதம் பேரிடம் பரவி விட்டதாகவும், சோதனை மேற்கொண்டதில் 4.4. சதவீத பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அடிப்படையில் ஜி4 வைரஸ் விலங்குகளிடம் இருந்து  மனிதர்களை சென்றடைந்து விட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில், மனிதர்களிடம் இருந்து  மற்ற மனிதர்களுக்கு பரவியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. 

புதிய ஜி4 வைரஸ் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.