This Article is From Oct 09, 2018

ஜெய்ப்பூரில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி..!

பிரதமர் (PM Modi) அலுவலகம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது

ஜெய்ப்பூரில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி..!

ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிந்ததை அடுத்து, ஜெய்ப்பூரில் கொசுக்களை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Jaipur:

ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் அலுவலகம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகம் ஜெய்ப்பூருக்கு இன்று சிறப்புக் குழு ஒன்றை அனுப்பி அறிக்கையை தயார் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி, ஒருவருக்கு ஜிகா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புனேவுக்கு, 22 பேரின் பரிசோதனை மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. 

ஜெய்ப்பூரின் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் 22 பேரும் தனி அறையில் வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. 

ஜெய்ப்பூரின் சாஸ்திரி நகரில் தான், ஜிகா வைரஸால் பாதிப்படைந்த நபரின் வீடு இருந்துள்ளது. இதையடுத்து, அங்கு 179 மருத்துவக் குழுக்கள் தொடர்ந்து மக்களிடம் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதித்து வருகிறது. 


அதேபோல பிகார் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும், ஜிகா வைரஸ் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டது, பிகாரைச் சேர்ந்த நபர் தான். அவரின் சொந்த ஊர் பிகாரின் சிவான் ஆகும். சிவானுக்கு அவர் சமீபத்தில் வந்து சென்றதை அடுத்து, பிகார் அரசும் உஷார் நிலையில் இருக்கிறது. 

ஜெய்ப்பூரில் படிக்கும் சிவானைச் சேர்ந்த அந்த நபர், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 12 வரை பிகாரில் அவரது குடும்பத்தினருடன் இருந்துள்ளார். இதனால் அவரின் குடும்பத்தினருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிந்ததை அடுத்து, ஜெய்ப்பூரில் கொசுக்களை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஜிகா வைரஸ் பாதிப்பு தற்போது 86 நாடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு என்பது, மற்ற வைரஸ் பாதிப்பைப் போலத்தான். காய்ச்சல், தோல் அரிப்பு, உடல் வலி, தலை வலி போன்றவைகள் தான் ஜிகா வைரஸ் வந்ததற்கான அறிகுறிகளாகும். 

இந்தியாவில் இதற்கு முன்னர் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2017-ல், அகமதாபாத்தில் ஜிகா வைரஸ் பரவியது. அதேபோல தமிழகத்தின் கிருஷ்ணகிரியில், ஜூலை 2017-ல் ஜிகா வைரஸ் பரவியது. இந்த இரண்டையும் துடிப்பான நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.

.