கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு!

கோவிலில் சிறப்பு பூஜை முடிந்த பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு!

இந்த சம்பவத்தை தொடர்ந்து 82 பக்தர்கள் மைசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Bengaluru:

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தில் இன்று கோவில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகாவில் உள்ள சிலுவாடி கிராமத்தில் உள்ள மாரந்தா கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்துடன் சில நச்சு பொருள் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மைசூர் அருகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலர் சுவாசக்கருவியின் துணையுடனே தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் மண்ணெண்ணெய் வாடை வந்தததாகவும் எனினும் பக்தர்கள் அதை பொருட்படுத்தாது உண்டதாகவும் தெரிகிறது. பிரசாதம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் உடனடியாக தென்பட ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கர்நாடகா முதல்வர் குமாரசாமி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். முதலில் நிலைமையின் தீவிரம் தெரியவில்லை. எங்களது சட்டமன்ற உறுப்பினர் சம்பவ இடத்தில் இருந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.