This Article is From Mar 27, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? நம்பிக்கையளிக்கும் புதிய தகவல்!

மத்திய சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி லாவ் அகர்வால் கூறுகையில், 'கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதை பார்க்கிறோம். இருப்பினும், கட்டுப்பாடுகள் நீடித்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? நம்பிக்கையளிக்கும் புதிய தகவல்!

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஹைலைட்ஸ்

  • கடந்த 24 மணிநேரத்தில் 43 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
  • நாள்தோறும் 70-80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது
  • ''கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை அல்லது குறைந்த வேகத்தில் பரவுகிறது''
New Delhi:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு நாளில் 70 முதல் 80 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். 

நேற்றுகூட 73 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 43 பேரை மட்டுமே கொரோனா பாதித்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 649 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லாவ் அகர்வால் கூறுகையில், 'கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதை பார்க்கிறோம். இருப்பினும், கட்டுப்பாடுகள் நீடித்திருக்க வேண்டும்.

கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உள்ளது. இதனை பாதிப்பு அதிகரிக்கவில்லை அல்லது கொரோனாவின் வேகம் குறைந்துள்ளது என்று கருதலாம். அதே நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே கூடாது. சமூக விலகல் குறித்து மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடி விடுவார்கள்' என்று கூறியுள்ளார்.  

மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு நேற்று முதல் நாடு முழுக்க அமலில் உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

21 நாட்கள் நாம் வீட்டில் இருப்பதை தவிர, கொரோனாவை ஒழிப்பதற்கு வேறு வழியே இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இதற்கிடையே இன்று பேட்டி அளித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதானம், 'நாடு முழுவதும் மக்கள் முடக்கப்படுவது மட்டும் தீர்வாக அமையாது. அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களை விரைவாக தனிமைப்படுத்த வேண்டும். அவர்களது உடல்நிலை மாற்றங்கள் அடிக்கடி பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். இதை விடவும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தாலே, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தலாம்' என்று தெரிவித்தார். 

கொரோனா வைரஸானது இந்தியாவில் சமூக பரிமாற்றம் என்ற 3-வது கட்டத்திற்கு இன்னும் செல்லவில்லை என்பதைத்தான் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போதைய தகவல்கள் நம்பிக்கையை அளித்தாலும், இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கணிக்க முடியாது.

கொரோனா தடுப்பை அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஒத்துழைக்கும் வகையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்பதுதான் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. 

.