This Article is From Dec 20, 2019

80 பேரை பலிகொண்ட ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை!!

2008 Jaipur blasts: முகம்மது சைப், சர்வார் ஆஸ்மி, சல்மான், சபியுர் ரஹ்மான் ஆகிருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5-வது நபரான சகாபாஸ் உசைன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2008-ல் நடத்தப்பட்ட ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு நடத்தியது.

Jaipur:

80 பேரை பலி கொண்ட ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து ராஜஸ்தான் நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2008-ல் நடந்த இந்த சம்பவத்தில் 80 பேர் உயிரிழந்தனர். 170 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

முகம்மது சைப், சர்வார் ஆஸ்மி, சல்மான், சபியுர் ரஹ்மான் ஆகிருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5-வது நபரான சகாபாஸ் உசைன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 3 பேர் டெல்லி திகார் சிறையில் உள்ளனர். குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கரை சேர்ந்த முகம்மது அதின் ஆவார். டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரின்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தற்போது தண்டனை அறிவிக்கப்பட்ட 4 பேரும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அதீனின் உத்தரவுப்படி அவர்கள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். வெடிகுண்டுகள் 9 இடங்களில் நிறுத்தப்பட்ட சைக்கிள்களில் பொருத்தப்பட்டு, மாலை 7.20 முதல் 7.45-க்குள்ளாக வெடிக்க வைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் இருவர் டெல்லியில் நடந்த பட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

 இந்திய முஜாஹிதீன்களால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் மே 2008 இல் ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பும் ஒன்றாகும்.

வழக்கில் விடுவிக்கப்பட்ட சகாபாஸ் உசேன், மின்னஞ்சல் அனுப்பி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். தான் இந்தியன் முஜாகிதீனை சேர்ந்தவர் என்றும் தெரிவித்திருந்தார். விசாரணையில் இதற்கான ஆதாரங்கள் இல்லை. கணினி அறிவியலில் எம்.டெக் முடித்தவரான உசேன், லக்னோவில் இன்டர்நெட் மையம் நடத்தி வந்தார். 

.