அமெரிக்க ஃப்லோரிடா மாகாணத்தில் இருக்கும் வணிக கட்டடம் ஒன்றில் வீடியோ கேம் போட்டி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியின் போது டேவிட் காட்ஸ் என்ற நம்பர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால், அங்கிருந்த 2 பேர் பலியாகியுள்ளதாகவும் 11 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரான டேவிட் காட்ஸும், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார் என்று உள்ளூர் காவல் துறை கூறியுள்ளது.
டேவிட் காட்ஸுக்கு 24 வயது ஆகிறது என்றும், அவர் பால்டிமோரைச் சேர்ந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஃப்லோரிடா மாகாணத்தின், ஜாக்ஸன்வில் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. ஜாக்ஸன்வில்லில் உள்ள சிகாகோ பிட்சா வணிக கட்டடத்தில் ‘மேடன் என்.எஃப்.எல் 19’ என்கின்ற வீடியோ கேம் போட்டி நடந்துள்ளது. அப்போது தான் துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸுக்கு மதியம் 1:34 மணி அளவில் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது போலீஸ்.
இது குறித்து ஜாக்ஸன்வில் கவுன்டி ஷெரிஃப் மைக் வில்லியம்ஸ், ‘நாங்கள் அங்கு சென்ற போதே, 3 பேர் இறந்த நிலையில் தரையில் கிடந்தனர். இதில் துப்பாக்கிச்சூடு நடத்தி டேவிட் காட்ஸும் அடங்குவார். 11 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டேவிட் காட்ஸ், இந்த வீடியோ கேம் போட்டியில் பங்கேற்க வந்துள்ளார். ஆனால், எதற்காக அவர் இப்படியொரு காரியத்தில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. மேலும், டேவிட்டுக்கு தான் கொன்றவர்களை முன்னரே அடையாளம் தெரியுமா என்றும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)