This Article is From Nov 24, 2018

ரிலீஸுக்கு முன்னரே ரூ.370 கோடி வசூலித்த ரஜினியின் ‘2.0’..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நட்சத்திரம் அக்‌ஷய் குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வரும் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘2.0’ திரைப்படம்

ரிலீஸுக்கு முன்னரே ரூ.370 கோடி வசூலித்த ரஜினியின் ‘2.0’..!

2.0 திரைப்படத்தில் ரஜினிகாந்த்

ஹைலைட்ஸ்

  • 2.0 சாட்டிலைட் உரிமம், ரூ.120 கோடி விற்கப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் லைகா நிறுவனமே படத்தை விநியோகம் செய்கிறது
  • ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது 2.0
New Delhi:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நட்சத்திரம் அக்‌ஷய் குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வரும் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘2.0' திரைப்படம். இந்தப் படத்தின் பட்ஜெட் 500 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமம் மற்றும் விநியோக உரிமம், 370 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது ‘பாலிவுட் ஹங்காமா'.

வெளியாவதற்கு முன்னரே 2.0 திரைப்படத்துக்கு மவுசு அதிகரித்துள்ளது, படக் குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக தெரிகிறது.

2.0 படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனம், சாட்டிலைட் உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமத்தை 60 கோடி ரூபாய்க்கும் விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல படத் தயாரிப்பாளரான லைகா, வட இந்தியா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களுக்கான பட விநியோகத்தை விற்றுவிட்டது எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் லைகா நிறுவனமே நேரடியாக படத்தை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு பிரிவுகளில் தான் படத்துக்கு அதிக லாபம் வரும் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான், இந்த இரு பிரிவை தயாரிப்பாளரே வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

பாலிவுட் ஹங்காமா, 2.0 குறித்து வெளியிட்டுள்ள செய்திப்படி,

சாட்டிலைட் உரிமம்: ரூ.120 கோடி

டிஜிட்டல் உரிமம்: ரூ.60 கோடி

வட இந்திய விநியோகம்: ரூ.80 கோடி

ஆந்திரா மற்றும் தெலங்கானா விநியோகம்: ரூ.70 கோடி

கர்நாடகா விநியோகம்: ரூ.25 கோடி

கேரளா விநியோகம்: ரூ.15 கோடி

மொத்தம்: ரூ.370 கோடி

படத்துக்கு 500 கோடி ரூபாய் கலெக்‌ஷன், முதல் வாரத்திலேயே வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் அமீர் கான், அமிதாப் பச்சன் ஆகிய பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்' திரைப்படம், கதையம்சம் சரியில்லாததால், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

ஆனால் 2.0 படக் குழு, ‘தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், 2.0 பார்த்து கண்டிப்பாக ஏமாற்றத்துடன் செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு மிகவும் தனித்துவமான அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும்' என்று நம்பிக்கை தெரிவிக்கிறது.

.