This Article is From Jul 11, 2019

''தமிழகத்தை நாசமாக்கும் திட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்'' : வைகோ!!

2009 ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை என்றால், இந்தியா, ஒரே நாடாக இருக்காது” என்று பேசினார். இந்தப் பேச்சுக்கு எதிராகத்தான் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.

''தமிழகத்தை நாசமாக்கும் திட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்'' : வைகோ!!

எம்.பி. ஆன பின்னர் அதற்கான சான்றிதழை வைகோ இன்று பெற்றுக் கொண்டார்

தமிழகத்தை நாசமாகக்கும் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினரான பின்னர் வைகோ கூறியுள்ளார். 
மாநிலங்களவை எம்.பி. ஆனதற்குரிய சான்றிதழை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திமுக உறுப்பினர்களான சண்முகம், வில்சன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது - 

சட்டசபை செயலாளரிடம் பெற்றிருக்கிறோம். தமிழ் இனத்தை, தமிழகத்தை, தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்திற்கு பேராபத்தாக உருவாகி வருகிற மதச்சார்பின்மையை தகர்க்கின்ற இந்துத்துவா சக்திகளினுடைய படையெடுப்பை தகர்த்து முறியடிப்பதற்கும், கூட்டாட்சி தத்துவத்தை வெற்றி பெறச் செய்வதற்கும், தமிழகத்தின் மீது பல்வேறு ஆக்கிரமிப்புகளை சுற்றுச் சூழலை நாசமாக்கும் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பதற்கும் கிடைக்கின்ற வாய்ப்பை நான் பயன்படுத்துவேன். 

அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் அவரது கொள்கைகளை, லட்சிய கனவுகளை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன். 

இவ்வாறு வைகோ கூறினார்.

முன்னதாக தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், எம்.பி ஆவதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்பட்டது. வைகோவின், வேட்பு மனுவையும் தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் என்று கூறப்பட்டது. இதை சமாளிக்கும் வகையில், ஒருவேளை வைகோவால் போட்டியிட முடியவில்லை என்றால், அதற்கு பதில் இன்னொருவர் களத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணியது திமுக. தொடர்ந்து என்.ஆர்.இளங்கோவும் திமுக சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

2 நாட்களுக்கு முன்பாக வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனையின்போது வைகோவின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மாநிலங்களவை எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார்

2009 ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை என்றால், இந்தியா, ஒரே நாடாக இருக்காது” என்று பேசினார். இந்தப் பேச்சுக்கு எதிராகத்தான் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்நதது திமுக-வினர்தான். அப்போது மதிமுக - திமுக எதிரெதிர் முகாமில் இருந்தன.

.