This Article is From Jan 18, 2020

தொடருமா திமுக - காங்கிரஸ் கூட்டணி? ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி என்ன சொல்கிறார்!

ஒவ்வொரு கட்சிக்கும் ஒருநிலை உள்ளது; அதையே சொன்னோம். அதனால் பாதிப்பில்லை. பிரச்சினை வந்தால் இரு தலைவர்களும் பேசி தீர்த்துக்கொள்வோம்.

தொடருமா திமுக - காங்கிரஸ் கூட்டணி? ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி என்ன சொல்கிறார்!

திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆரோக்யமான விவாதங்கள் தான் நடந்தது.

திமுக உடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக குறித்து தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிஏஏவுக்கு எதிராக டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், திமுக தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை.

இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் பேசிய கே.எஸ்.அழகிரி, கூட்டணியில் எந்த பிரிவும் இல்லை எனவும் இணைந்த கரங்களாக உள்ளோம் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து திமுகவை சேர்ந்த துரைமுருகன், காங்கிரஸ் பிரிந்து சென்றாலும் கவலையில்லை என அதிரடியாக பேசினார். இதனால், தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வந்தது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது,  கே.எஸ்.அழகிரியுடன் கே.வி.தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, திமுக-காங்கிரஸ் இடையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசியதாகவும், ஒவ்வொரு கட்சிக்கும் ஒருநிலை உள்ளது; அதையே சொன்னோம். அதனால் பாதிப்பில்லை. பிரச்சினை வந்தால் இரு தலைவர்களும் பேசி தீர்த்துக்கொள்வோம்.

தொடர்ந்து, அவரிடம் காங்கிரஸ்- திமுக ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்ததாக கமல்ஹாசன் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பிய போது, கமல்ஹாசன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். மதசார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கமல் பாஜக ஆதரவாளர் ரஜினியின் உதவியை நாடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் பேசிய அவர், கூட்டணி கட்சிகளுக்கு இடையில் ஆரோக்கியமான விவாதங்கள் செய்வது தவறில்லை, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் இரு கட்சி கூட்டணி தொடரும். திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆரோக்யமான விவாதங்கள் தான் நடந்தது. குடியுரிமை சட்டம் குறித்து கருத்து கூறமுடியாத அதிமுக எங்கள் கூட்டணி குறித்து கருத்து சொல்வது தவறு என்று தெரிவித்துள்ளார்.

.