This Article is From Feb 22, 2020

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ? ராமதாஸ்

பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ? ராமதாஸ்

தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை - பாரதிதாசன்

தமிழ்நாட்டிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, நேற்றைய தினம் தாய்மொழித் திருநாளையொட்டி சென்னை தரமணியில் உலகத் தமிழராய்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பாண்டிய ராஜன் பங்கேற்றார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழில் பெயர் சூட்டாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தைத் தமிழ் வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இல்லாத நிலை உள்ளதாகவும் அதை தார் பூசி அழித்திடும் நடவடிக்கையில் இறங்கவும் தமிழ் வளர்ச்சித்துறை தயங்காது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் இவ்வாறு பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எப்போது என, ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, "பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ?

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்று 1977 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்.575, 42 ஆண்டுகளாகியும் செயலாக்கப்படவில்லை. தமிழர் தெருக்களில் விரைவில் தமிழ் செழிக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். 

.