“எங்கள் நாட்டில் 30,000-40,000 தீவிரவாதிகள் உள்ளனர்!”- ஒப்புக்கொண்ட பாக். பிரதமர் இம்ரான் கான்

"எங்கள் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்ததை அடுத்துதான், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.”

“எங்கள் நாட்டில் 30,000-40,000 தீவிரவாதிகள் உள்ளனர்!”- ஒப்புக்கொண்ட பாக். பிரதமர் இம்ரான் கான்

இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அந்நாட்டுப் பிரதமரே இப்படி சொல்லியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

Washington:

‘ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீர் பகுதியில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளில் 30,000 முதல் 40,000 பேர் பாகிஸ்தானில் இன்னும் இருக்கின்றனர்' என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அந்நாட்டுப் பிரதமரே இப்படி சொல்லியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இம்ரான் கான், “என் தலைமையிலான ஆட்சி பாகிஸ்தானில் பதவியேற்கும் வரை எந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணிச்சல் இருக்கவில்லை. இன்னும் எங்கள் நாட்டில் 30,000 முதல் 40,000 தீவிரவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரில் பயிற்சி எடுத்திருக்கலாம். 

எங்கள் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்ததை அடுத்துதான், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.” என்றார்.

இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான், “பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்குள் செயல்பட்டன. இது குறித்த உண்மையை முன்னர் எங்கள் நாட்டை ஆண்ட கட்சிகள் சொல்லவில்லை.

தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்து நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். 9/11 தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்கானிஸ்தானில் இருந்துதான் அல்-கய்தா தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வந்தது. தாலிபான் தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் இருக்கவில்லை. அதனால்தான் அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் சண்டையிட்டோம். ஆனால், போர் எங்களுக்கு எதிராக சென்றபோது, தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன. பாகிஸ்தானில் இருந்த உண்மை நிலை அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. 

அப்படி நடந்ததற்குக் காரணம், பாகிஸ்தான் அரசிடம் அனைத்து அதிகாரமும் இருக்கவில்லை. பாகிஸ்தானில் இருந்து மட்டும் சுமார் 40 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டன. ஒரு கட்டத்தில் என்னைப் போன்றவர்கள், இந்த சூழலில் பிழைத்திருக்க முடியுமா என்று கூட அச்சப்பட்டோம். அந்த சமயத்தில் அமெரிக்காவுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். உண்மையில் எங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே சிரமமாக இருந்த காலகட்டம் அது.

இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசியிருப்பது சரியானது. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால், இருவருக்கும் இடையில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறேன். இப்போதிலிருந்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு என்பது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.