This Article is From Jun 26, 2020

ஒசாமா பின் லாடனை ‘தியாகி’ என சொன்ன பாகிஸ்தான் பிரதமர் - வலுக்கும் எதிர்ப்பு!

10 ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டயைத் தொடர்ந்து ஒசாமா இருக்கும் இடமான இஸ்லாமாபாத்திற்கு வடக்கே இருக்கும் அபோட்டாபாத்தைக் கண்டறிந்தது அமெரிக்கா.

ஒசாமா பின் லாடனை ‘தியாகி’ என சொன்ன பாகிஸ்தான் பிரதமர் - வலுக்கும் எதிர்ப்பு!

கடந்த 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லாடனை சுட்டு வீழ்த்தினார்கள்.

ஹைலைட்ஸ்

  • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இப்படி பேசியுள்ளார் இம்ரான் கான்
  • இம்ரான் கானுக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது
  • 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்தார் ஒமாசா பின் லாடன்
Islamabad:

அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லாடனை ‘தியாகி' என்று குறிப்பிட்டுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அவரின் சர்ச்சைக்குரிய பேச்சினால் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் சந்தித்துள்ளார். 

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிறப்புப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து, அவர்கள் அனுமதியின்றி ஒசாமா பின் லாடனைக் கொன்றதிலிருந்து, இரு நாட்டு உறவிலும் எப்படி பிரச்னை எழுந்தது என்பது குறித்துப் பேசியுள்ளார் இம்ரான் கான். 

“பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின் லாடனைக் கொன்றனர். இதனால்தான் இரு நாட்டு உறவிலும் விரிசல் விழுந்தது” என்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் இம்ரான் கான். 

அவரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் செயற்பாட்டாளர்களும் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், கவாஜா ஆசிஃப், “இம்ரான் கான், வரலாற்றைத் திரித்துப் பேசியுள்ளார். இன்று அவர் ஒசாமா பின் லாடனை தியாகி என்று சொல்லியிருக்கிறார்,” என்று கொதிப்புடன் கருத்து தெரிவித்துள்ளார். 

அதேபோல அந்நாட்டைச் சேர்ந்த பிரபல செயற்பாட்டாளர், மீனா கபீனா, “சமீப காலமாக உயர்ந்து வரும் தீவிரவாதத்தினால்தான் உலகின் பல முளைகளிலும் முஸ்லீம்கள் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அதை இன்னும் மோசமாக்கும் வகையில் நமது பிரதமர், ஒசாமா பின் லாடனை தியாகி என்று குறிப்பிட்டுள்ளார்,” என ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லாடனை சுட்டு வீழ்த்தினார்கள். ஒசாமா, அங்கு பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்தது. 

இது சர்வதேச அளவில் அந்த நாட்டிற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தித் தந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் உளவுத் துறையைச் சேர்ந்த அசா துரானி, கடந்த 2015 ஆம் ஆண்டு, அல் ஜசீரா செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “பாகிஸ்தானுக்கு ஒசாமா எங்கு பதுங்கியிருந்தார் என்பது தெரிந்திருந்தது. அவரை வைத்துப் பேரம் பேசலாம் என்று பாகிஸ்தான் அரசு கணக்குப் போட்டிருந்தது,” என்று சர்ச்சைக்குரியத் தகவலை தெரிவித்தார். 

10 ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டயைத் தொடர்ந்து ஒசாமா இருக்கும் இடமான இஸ்லாமாபாத்திற்கு வடக்கே இருக்கும் அபோட்டாபாத்தைக் கண்டறிந்தது அமெரிக்கா. அங்கு பாகிஸ்தானின் ராணுவ அகாடமி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இம்ரான் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற கான், “பின் லாடனை கண்டுபிடிக்க பாகிஸ்தானின் உளவத் துறை தகவல் தெரிவித்தது,” என்று கூறி அதிர்ச்சிக் கிளப்பினார். 

பல நேரங்களில் அடிப்படைவாத அமைப்புகளுக்கும் அது சார்ந்த நபர்களுக்கும் ஆதரவாக இம்ரான் கான் கருத்து தெரிவித்து வருவதால் அவரை, ‘தாலிபான் கான்' என்று அழைக்கின்றனர் எதிர்க்கட்சியினர். 
 

.