என்டிடிவி, இன்று 12 மணி நேர, க்ளீனத்தான் தொடர் நேரலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ‘என்டிடிவி-டெட்டால் பனேகா ஸ்வச் இந்தியா’ க்ளீனத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சாதித்தவைகள் குறித்தும், அடுத்து வர உள்ள காலத்தில் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்தும் இன்று 12 மணி நேர நேரலை நிகழ்ச்சி விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதி, இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தூதர் அமிதாப் பச்சன், நிகழ்வுகளை இந்த ஆண்டும் ஒருங்கிணைத்து வருகிறார்.
இந்த முன்னெடுப்பின் மூலம், கிராமப்புறங்களில் கழிவறைகள் கட்டுவது, சுத்தப்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்துவது, சுகாதாரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு க்ளீனத்தான் நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேரலையில் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘நாங்கள் 8 கிராமங்களைத் தத்தடெத்துள்ளோம். இவை அனைத்தையும் நாங்கள் மாதிரி கிராமங்களாக, ஸ்மார்ட் கிராமங்களாக மாற்ற முயல்வோம். அதன் மூலம் கிராமத்திலிருந்து மக்கள் நகரங்களுக்கு இடம் பெயராமல் இருப்பார்கள் என்று நம்புகிறோம்’ என்று கருத்து தெரிவித்தார்.