This Article is From Jul 16, 2019

நாட்டு வெடிகுண்டுகளை வீசி திரிணாமூல் காங். – பாஜக தொண்டர்கள் கடும் மோதல்!!

மேற்கு வங்கத்தில் முழு வீச்சில் வளர்ந்து வரும் கட்சியாக பாஜக இருந்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

Kolkata:

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

இந்தியாவில் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் இருந்து வருகிறது. 2014 மக்களவை தேர்தலின்போது மொத்தமே 2 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

தற்போது நடந்து முடிந்திருக்கும் மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு 18 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். அடுத்ததாக 2021 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வடக்கு கொல்கத்தா பகுதியில் உள்ள போங்கான் என்ற நகராட்சியில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கிடையே உள்ளாட்சி விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்தது.

அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது. இதையடுத்து அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டது.

சில நிமிட போலீஸ் நடவடிக்கைக்கு பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவம் நடந்த போங்கான் நகராட்சியில் மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 19 பேர் திரிணாமூல காங்கிரசை சேர்ந்தவர்கள்.இந்த நிலையில் 19 பேரில் 12 பேர் கடந்த மாதம் பாஜகவுக்கு தாவி விட்டனர்.

இந்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2 பாஜக கவுன்சிலர்கள் தன்னை கடத்த முயற்சிப்பதாக திரிணாமூல் கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பாஜக உறுப்பினர் ஒருவர் முன் ஜாமீன் கேட்டு இந்த வழக்கு தொடர்பாக பெற்றுள்ளார்.

இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருவதால் பிரச்னை நீடித்து வருகிறது.

.