Viral Video: “இயற்கை எப்போதும் நமக்கு ஆச்சரியம் கொடுப்பதை நிறுத்துவதில்லை”
Viral Video: ட்விட்டர் தளத்தில் ஒரு படுவைரலான பழைய வீடியோ மீண்டும் வைரலாகி பலரை, ‘ஓ மை காட்' என சொல்ல வைத்துள்ளது. இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவரால், இந்த வீடியோ, ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு, தற்போது பார்ப்போரை மிரட்சியில் ஆழ்த்தி வருகிறது.
வீடியோவில், ஒரு குரங்கு சிறுத்தையிடமிருந்து தப்பிக்க தறிகெட்டு ஓடப் பார்க்கிறது. மரத்தின் மீது ஏறி சிறுத்தைக்குக் கண்ணாம்பூச்சி காட்டலாம் என்று நினைத்து விறுவிறுவென கிளைகளில் தாவுகிறது. குரங்கைவிட வேகமாக இருக்கும் சிறுத்தை, விடாமல் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது என்பதை உணரும் குரங்கு, உச்சிக் கிளையிலிருந்து கப்பென்று தாவுகிறது. தப்பித்துவிட்டோம் என்று குரங்கு நினைப்பதற்குள், சிறுத்தை, தலைகீழாக தாவி குரங்கை வாயில் கவ்வுகிறது. முதலில் காமெடியாக ஆரம்பித்த வீடியோ, குரங்கிற்கு டிராஜிடியாக முடிந்தது.
தென் ஆப்ரிக்கக் காட்டில் ஸ்டெஃபனி மெக்கோனல் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைனில் முதன்முதலாக பகிரப்பட்டது. தற்போது அது அதிகாரி நந்தாவால் மீண்டும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
“நம்ப முடியாத பேக்-ஃபிளிப் அடித்து குரங்கைப் பிடிக்கிறது சிறுத்தை. பொதுவாக சிறுத்தைகள், தங்களது இரைகளை கழுத்தில் கடித்துக் கதையை முடித்துவிடும். இங்கு கழுத்தில் கடிக்க தலைகீழாக குதிக்கிறது சிறுத்தை,” என்று வீடியோவுடன் கருத்திட்டுள்ளார் நந்தா.
இந்த வீடியோப் பார்த்து அசந்துபோன ட்விட்டர் பயனர் ஒருவர், “விவரிக்கவே முடியாதது. ஒரு குரங்கை மரத்திலேயே பிடித்துள்ளது இந்த சிறுத்தை. மிகவும் திறன் வாய்ந்ததுதான்,” என சிறுத்தைக்குப் புகழாரம் சூட்டுகிறார். இன்னொரு பயனர், “இயற்கை எப்போதும் நமக்கு ஆச்சரியம் கொடுப்பதை நிறுத்துவதில்லை,” என் மெய் சிலிர்க்கிறார்.
Click for more
trending news