This Article is From Nov 20, 2019

மீண்டும் முத்திரைப் பதித்த வைகோ… நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக உருக்கமான பேச்சு!

"ஜாலியன் வாலாபாக் விவகாரத்தில் அப்போது எதிர்த்துக் களமாடிய காங்கிரஸ் தியாகிகளுக்கு அதிக பங்கு இருக்கிறது"

மீண்டும் முத்திரைப் பதித்த வைகோ… நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக உருக்கமான பேச்சு!

"தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்தான் அப்போது சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்தனர்"

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் (Vaiko) காங்கிரஸ் கட்சிக்கும் (Congress) சமீப காலமாக பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டாலும், ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உரையாற்றியுள்ளார் வைகோ. இந்த உருக்கமான உரைக்கு வெகுவான பாராட்டுகள் கிடைத்துள்ளன. 

ஜாலியன் வாலாபாக் நிகழ்வு குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, “ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தைப் பற்றி நினைத்தாலே, போர்க்குணம் மிக்கவர்களின் ரத்தம் கொதிக்கும். அப்போது கூடியிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை அழித்தொழிக்க வந்த பிரிட்டிஷ் அரசு படையினர், தங்கள் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை கொலை செய்தனர். அந்த இடமே ரத்த வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்து ஒரு ஜாடியில் மண் எடுத்து வந்து தன் வீட்டில் கொடுத்த ஒரு சிறுவன், ‘இதைத் தான் இனி நாம் வணங்க வேண்டும்' என்றான். அந்தச் சிறுவனின் பெயர்தான் பகத் சிங். ஜாலியன் வாலாபாக் விவகாரத்தில் அப்போது எதிர்த்துக் களமாடிய காங்கிரஸ் தியாகிகளுக்கு அதிக பங்கு இருக்கிறது. தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்தான் அப்போது சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்தனர்.

வரலாற்றை யார் என்ன செய்ய நினைத்தாலும் அதைத் திரிக்க முடியாது. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், காங்கிரஸ் கட்சியின் தலைவரின் பெயரை ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளையிலிருந்து நீக்கியுள்ளது. இது அரசின் சிறுபிள்ளைத் தனமான புத்தியையே காண்பிக்கிறது. நான் ஒன்றும் காங்கிரஸ்காரன் அல்ல. ஆனால், இந்த அரசுக்கு நான் ஒரு தாழ்மையான கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். அந்த அறக்கட்டளையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் பெயரையும் சேருங்கள். அப்போதுதான் வரலாற்றுக்கு நாம் நீதி செய்ததாக அமையும்,” என்றார் மிக உருக்கமாக. 

வைகோ பேசி முடித்து அமர்ந்த பின்னர், ராஜ்யசபாவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பி அவரது பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்தனர். 
 

.