“இந்தியா மீது விசாரணை செய்யப்படும்!”- அமெரிக்கா அரசு அதிரடி அறிவிப்பு

கடந்த ஆண்டு இதைப் போன்ற ஒரு விசாரணையை பிரான்ஸுக்கு எதிராக செய்தது அமெரிக்கா.

“இந்தியா மீது விசாரணை செய்யப்படும்!”- அமெரிக்கா அரசு அதிரடி அறிவிப்பு

தற்போது நடத்தப்பட உள்ள விசாரணை வளையத்திற்குள் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வர உள்ளன. 

ஹைலைட்ஸ்

  • டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது
  • டிரம்ப் பல்வேறு நாடுகளுடனான வர்த்தகம் பற்றி கேள்வி எழுப்புகிறார்
  • முன்னதாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் நடந்தது
Washington, United States:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, தங்கள் நாட்டு டெக் நிறுவனங்களைக் குறிவைத்து வசூலிக்கப்படும் வெளிநாட்டு டிஜிட்டல் சேவை வரிகள் பற்றி விசாரணை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இதைப் போன்ற ஒரு விசாரணையை பிரான்ஸுக்கு எதிராக செய்தது அமெரிக்கா. தற்போது நடத்தப்பட உள்ள விசாரணை வளையத்திற்குள் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வர உள்ளன. 

இது குறித்து யுஎஸ்டிஆர் சார்பில் ராபர்ட் லைத்திசர் தெரிவிக்கும்போது, “அதிபர் டிரம்ப், பல நாடுகளில் எங்கள் டெக் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரி முறை, நியாயமான முறையில் இல்லை என்று கவலைப்படுகிறார். இப்படி எங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார். 

அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் டெக் நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்டவைகளின் வருவாய் மீது தேவையில்லாமல் அதிக வரி விதிக்கப்படுவதாகவும், இது அந்நாட்டு அரசு தரப்புக்குப் பிடிக்கவில்லை என்றும் தெரிகிறது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு, மாறுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் சேவைகள் வரிக்கு ஒப்புதல் அளித்தது. இந்த வரியானது அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டியது அமெரிக்க அரசு தரப்பு மற்றும் யுஎஸ்டிஆர். மேலும் வரி முறையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஷாம்பெயின் மற்றும் சீஸ் உள்ளிட்டவைகளுக்கு 100 சதவீத வரி விகிதம் உயர்த்தப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்தது. இதனால் பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் தரப்பு ஒப்புக் கொண்டது. 

2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு நாடுகளுடனான வர்த்தகங்கள் குறித்து தொடர்ந்து பிரச்னை எழுப்பி வருகிறார் டிரம்ப். இதன் விளைவாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பல மாதங்கள் வர்த்தகப் பனிப் போர் நடந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரு நாடுகளும் வர்த்தகம் குறித்து போட்ட ஒப்பந்தத்தில் பனிப் போர் முடிவுக்கு வந்தது.