This Article is From May 16, 2019

ஓரணியில் எதிர்க்கட்சிகள்; நாள் குறித்த காங்கிரஸ்- காய் நகர்த்தும் சோனியா!

தான் வகித்த வந்த காங்கிரஸ் தலைவர் பதவியை தனது மகன் ராகுல் காந்திக்கு விட்டுத் தந்த சோனியா, ஐ.மு.கூ தலைவர் பதவியை மட்டும் தன்னிடமே வைத்துக் கொண்டார்

ஓரணியில் எதிர்க்கட்சிகள்; நாள் குறித்த காங்கிரஸ்- காய் நகர்த்தும் சோனியா!

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் இப்படிப்பட்ட சந்திப்புக்கு அவசியம் இல்லை என்று சில எதிர்கட்சித் தலைவர்கள் நினைக்கிறார்களாம்.

New Delhi:

பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இறங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

மே 23 ஆம் தேதி, இந்த சந்திப்பு நடக்கும் என்றும், இதையொட்டி சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உட்பட பல கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் சோனியா, தூது விட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

2017 ஆம் ஆண்டு, தான் வகித்த வந்த காங்கிரஸ் தலைவர் பதவியை தனது மகன் ராகுல் காந்திக்கு விட்டுத் தந்த சோனியா, ஐ.மு.கூ தலைவர் பதவியை மட்டும் தன்னிடமே வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நடந்து வரும் தேர்தலிலும் சோனியா காந்தி, பெரிதாக பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. 

சமீபத்தில் கோவா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும், இரண்டாவது இடத்தில் வந்த பாஜக, அரசியல் காய் நகர்த்தல்கள் மூலம் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அரியணையில் ஏறியது. அதைப் போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் முனைப்பாக இருப்பதாகத் தெரிகிறது. 

சோனியாவின் அழைப்பை மீறியும், சில எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் ஒருங்கிணைக்கும் சந்திப்புக்கு வராது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிகிறது. 

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் இப்படிப்பட்ட சந்திப்புக்கு அவசியம் இல்லை என்று சில எதிர்கட்சித் தலைவர்கள் நினைக்கிறார்களாம். மம்தா மற்றும் மாயாவதி ஆகியோரும், பிரதமர் பதவியை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் மு.க.ஸ்டாலின் உட்பட சில எதிர்கட்சித் தலைவர்கள், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்பதில் உறுதியாக இருக்கின்றனர்.


 

.