பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் அக்பர்… ராஜினாமா செய்ய வாய்ப்பு என தகவல்!

பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் அக்பர்… ராஜினாமா செய்ய வாய்ப்பு என தகவல்!

மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருக்கிறார் எம்.ஜே.அக்பர்

New Delhi:

பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்வது குறித்து அமைச்சர் அக்பர் இன்று முடிவெடுப்பார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

#MeToo எனப்படும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்த உண்மைகளை வெளியிடும் பிரசாரம், தற்போது இந்தியாவில் சூடுபிடித்துள்ளது. இந்தப் பிரசாரத்தில் நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், மூத்த பத்திரிகையாளரும், மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பரும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இவர் மீது பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர் முதன் முதலாக ட்விட்டரில் குற்றம் சாட்டினார். அதையடுத்து, பலரும் அக்பர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

இது குறித்து பாஜக தரப்பு அமைதி காத்து வந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, ‘இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் இதைப் போன்ற சம்பவத்தில் ஈடுபடுவார்கள். இது அரசியல், பத்திரிகைத் துறை என எல்லாவற்றுக்கும் பொறுந்தும். பெண்கள் இது குறித்து பேசத் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்’ என்று ட்விட்டரில் கருத்திட்டார்.

அக்பர் மீதான குற்றச்சாட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அவர் நைஜீரியாவில் இருக்கிறார். அவரை, மத்திய அரசு தரப்பு, நாட்டுக்கு திரும்ப வரச் சொல்லி இருப்பதாகவும், குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்பர், இந்தியா திரும்பிய பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

More News