This Article is From Jul 15, 2020

லாக்டவுன் காலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள்!- தீர்வு என்ன? #LetsTalkSeries

தமிழகத்தினைப் பொறுத்த அளவில் 2018-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

லாக்டவுன் காலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள்!- தீர்வு என்ன? #LetsTalkSeries

ஹைலைட்ஸ்

  • பொருளாதார மாற்றம்கூட பெண்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கும்
  • 60 வயதைக் கடந்த பெண்களில் 73 பேர் பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்
  • NDTV தமிழ்,விவாதங்களை முன்னெடுக்க விரும்புகின்றது

நாடு முழுவதும் கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் பல தரப்பட்ட மக்கள் முன்னெப்போதும் இல்லாத துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். சமூக அடுக்குகளில் எப்போதும் போல கடை நிலையில் அழுத்தப்படும் பெண்கள், இந்த நெருக்கடி காலகட்டத்தில் இன்னும் அதிகமான அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட முழு முடக்க நடவடிக்கைகளும், அதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களும் அவை சந்திக்கும் துன்பங்களும் விவரிக்க முடியாதவை. அரசு கொடுக்கும் நிவாரண பணம் நான்கு, ஐந்து நாட்களுக்குள்ளேயே காணாமல் போய்விட, வறுமை மேகம் மீண்டும் சூழ்ந்து விடுகிறது.

இப்படியான சூழலிலும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றதேயன்றி குறைந்தபாடில்லை. பெண்கள் மீதான தாக்குதல்களை வெறுமனே ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்கிற சிமிழுக்குள் அடக்கிவிட முடியாது. சமூக புறச்சூழல் ஏற்படுத்துகின்ற பொருளாதார மாற்றம்கூட பெண்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கவும், அதனை நீட்சியடையச் செய்யவும் வைக்கின்றது என்றால் அது மிகையல்ல.

34i1famo

 60 வயதைக் கடந்த பெண்களில் 73 பேர் இக்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக என்சிஆர்பி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி 2016 -ம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி-National Crime Records Bureau) புள்ளிவிவரங்கள் தெளிவுப்படுத்தியுள்ளது. 2016-ல் தேசிய அளவில் 3,38,954 வழக்குகள் பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைக்காக பதியப்பட்டுள்ளன. 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் இந்த வழக்குகளின் எண்ணிக்கையானது 3,59,849 மற்றும் 3,78,277 ஆக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிராக 20 ஆயிரம் குற்றங்கள் நாடு முழுவதும் புதியதாக பதியப்படுகின்றதை இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2016-ல் 4,463 ஆகவும், 2017 மற்றும் 2018 காலக்கட்டங்களில் 5,397 மற்றும் 5822 என அதிகரித்துள்ளது. இவையெல்லாம் வழக்காக பதியப்பட்ட விவரங்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் பெரும்பாலும் கட்டப்பஞ்சாயத்துகளால் தீர்த்து வைக்கப்படுகின்றன என பெண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்த அளவில், கடந்த 2018-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 6 வயதிற்கு உட்பட்ட 281 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். 60 வயதைக் கடந்த பெண்களில் 73 பேர் இக்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக என்சிஆர்பி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் பெண்களின் உடை மீதான பிற்போக்கு சிந்தனையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு NDTV தமிழ், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது தொடுக்கப்படும் தொடர் வன்முறைகளுக்கு எதிராகவும் அதனைத் தடுப்பதற்கான தீர்வுக்கான காரணிகள் குறித்தும் விவாதங்களை முன்னெடுக்க விரும்புகின்றது. அதன் தொடர்ச்சியாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடமிருந்து கலந்துரையாடலை தொடங்குகிறோம்.

.