“பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாகும் சமூக பொருளாதார சூழல்கள்!”; Dr.சாந்தி #LetsTalkSeries

இந்தியா பாலின சமத்துவத்தில் அண்டை நாடுகளை காட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளதாக உலக பொருளாதார மன்றத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியா சர்வதேச நாடுகளின் வரிசையில் 112வது இடத்தில் உள்ளதாக “பிசினஸ் டுடே” குறிப்பிட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாகும் சமூக பொருளாதார சூழல்கள்!”; Dr.சாந்தி #LetsTalkSeries

ஹைலைட்ஸ்

  • 95 சதவிகித உழைப்பாளிகள் முறைசாரா தொழில்களில்தான் இருக்கின்றனர்
  • சர்வதேச அளவில் பாலின சமத்துவமின்மை பட்டியலில் இந்தியா மிக மோசமான நிலையில்
  • இந்தியா பாலின சமத்துவத்தில் 112வது இடத்தில் உள்ளது

கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் குறித்து பெண்ணியலாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தங்களுடைய கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளரும் மருத்துவருமாகிய சாந்தி  நம்மிடையே உரையாடியதிலிருந்து...

கொரோனா தொற்று காரணமாகச் சர்வதேச அளவிலும் லாக்டவுன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், உலக நாடுகளில் பெண்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது?

இந்த லாக்டவுன் காலகட்டம் என்பது தமிழக அல்லது இந்தியச் சூழலில் உள்ள பெண்களை மட்டும் பாதிக்கவில்லை. லாக்டவுனை பின்பற்றுகின்ற சர்வதேச நாடுகளும், அந்நாடுகளில் உள்ள பெண்களும் பெரும் மன உளைச்சலையும் வன்கொடுமைகளையும் எதிர்கொண்டுள்ளனர். இயல்பான காலகட்டங்களில் குடும்ப பிரச்னையெனில் பெண்கள் தங்களது தாயார் வீடுகள் அல்லது வேறெங்கேனும் சென்று இளைப்பாறுவார்கள். ஆனால், இப்படியான வாய்ப்புகளையெல்லாம் அரசு அடைத்துவிடும்போது இயல்பாகவே பெண்கள் தங்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பெரும்பாலான இந்திய குடும்பங்களில் வருவாய் ஈட்டும் நபராக ஆண்களே இருக்கின்றனர். 95 சதவிகித உழைப்பாளிகள் முறைசாரா தொழில்களில்தான் இருக்கின்றனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முறைசாரா தொழில்களில் லாக்டவுன் காலத்தில் பெரும் வேலையிழப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலையில்லாதிருத்தல், போன்றவை ஆண்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இந்த மன உளைச்சல், வெறுப்பு, விரத்தி போன்றவற்றைத் தனது துணையின் மீது வன்முறையாகவும், பாலியல் தாக்குதலாகவும், வெளிக்காட்ட தூண்டுகிறது. இது ஒருபடி மேலே சென்று குழந்தைகள் மீதும் வன்கொடுமையைக் கட்டவிழ்த்துவிட காரணமாக அமைந்துவிடுகிறது.

அதே போலக் குழந்தை திருமணங்களும் இந்த லாக்டவுன் காலத்தில் அதிகரித்திருக்கின்றது. போதை கலாச்சாரங்கள் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது. ஏற்கெனவே உள்ள வேலையின்மை, விரத்தி, பொருளாதார நெருக்கடி போன்றவற்றோடு போதை பழக்கமும் கைகோர்க்கும்போது பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துவிடுகிறது. குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் கொலைகளில் சென்று முடிகின்றது.

அதே போல லாக்டவுன் காலங்களில் தேவையில்லா கர்ப்பங்களும் அதிகரித்துள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மற்றொரு குழந்தை வேண்டாம் என்கிற எண்ணம் இருந்தாலும், வேலையில்லாத காரணத்தினால் வீட்டிலேயே தம்பதிகள் இருக் நேர்வதால் தேவையற்ற கர்ப்பம் உண்டாகிறது. அதனைக் கலைப்பதற்கும் போதுமான பொருளாதார வாய்ப்புகள் இருப்பதில்லை.

2019 ஆம் ஆண்டில், பொதுச் சுகாதாரத் துறை பெரும்பான்மையான கருத்தடைகளைச் சாதனங்களை வழங்கியுள்ளது. 3.5 மில்லியன் கருத்தடைகள், 5.7 மில்லியன் கருப்பை கருத்தடை சாதனங்கள், 1.8 மில்லியன் ஊசி மூலம் கருத்தடை மருந்துகள், 410 மில்லியன் சுழற்சி வாய்வழி கருத்தடை மாத்திரைகள், 2.5 மில்லியன் அவசர கருத்தடை மாத்திரைகள் மற்றும் 322 மில்லியன் ஆணுறைகள் இக்காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது 2020-ல் லாக்டவுன் காரணத்தினால் முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட கருத்தடை சாதனங்களை தற்போது வழங்குவதிலும், பெண்கள் அவற்றைப் பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வறுமை, நிச்சயமற்ற சூழல், கடன், வேலையின்மை போன்ற காரணங்களோடு சேர்த்து, வன்கொடுமை தொல்லை காரணமாகவும், பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தான் இறந்த பின்னர் தன்னுடைய குழந்தைகள் கஷ்டப்படும் என்பதால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொள்கிறாள்.

 தற்போது சர்வதேச அளவில் பாலின சமத்துவமின்மை பட்டியலில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் சர்வதேச நாடுகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பல நாடுகள் முறையாகப் பதிலளிக்கவில்லை.

லாக்டவுன் காலகட்டங்களில் மற்றொரு சவால், மன நோயாளிகளுக்கான மருந்துகளைப் பெறுவதும் அவர்களைச் சிகிச்சைக்கு அழைத்து செல்வதும்தான். மருந்து பெறமுடியாத நிலை ஏற்படும் போது மனநோயாளிகள் இயல்பிலிருந்து தவறுகிறார்கள். இதில் ஆண் நோயாளிகள் பெற்ற தாய் மீதே பாலியல் சீண்டலை அரங்கேற்றும் அவலமும் நடக்கின்றது.

ஆக இப்படியான பல பிரச்னைகள் சமூகத்தில் இந்த லாக்டவுன் காலத்தில் அதிகரிக்கின்றன. இதனைக் குறைப்பதற்கு வெறுமென கடுமையான சட்டங்கள் எதற்கும் பயன்படாது. இந்த பிரச்னைகளின் அடிநாதம் என்பது அரசு கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் பின்பற்றக்கூடிய கொள்கைகளில்தான் உள்ளது.

எனக்கு முன்பு பலர் பாலியல் சமத்துவ கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்கள். பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கு பாலியல் சமத்துவ கல்வி அவசியமானதாகும். எனவே அரசு தனது குடிமக்களுக்கு தரமான இலவச கல்வியையும், தரமான இலவச மருத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும். ஆனால், இந்தியச் சமூகத்தில் யதார்த்தம் இம்மாதிரியாக இல்லையென்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகிறது.

உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளில் நிலவி வரும் பாலின சமத்துவமின்மை குறித்து தனது கவலையை தெரிவித்து, அதற்கான காரணம் குறித்தும் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்தியா பாலின சமத்துவத்தில் அண்டை நாடுகளை காட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளதாக உலக பொருளாதார மன்றத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியா சர்வதேச நாடுகளின் வரிசையில் 112வது இடத்தில் உள்ளதாக “பிசினஸ் டுடே” குறிப்பிட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான களத்தில் அரசாங்கத்தின் பங்கு என்பது மிக மிக முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.