This Article is From Oct 24, 2018

டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும்!’- ஜெயக்குமார் விவகாரத்தில் வெற்றிவேல் பேச்சு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் உரையாடுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும்!’- ஜெயக்குமார் விவகாரத்தில் வெற்றிவேல் பேச்சு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் உரையாடுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து தமிழக எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவாளரான தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ வெற்றிவேல், ‘அந்தப் பெண்ணின் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை நடத்தி இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்று கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 'ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் ஆடியோவை போலியாக தயார் செய்துள்ளனர்.

போலியாக ஆடியோவை தயார் செய்து வெளியிட்டோர் பின்னணியில் டிடிவி குடும்பத்தினர் உள்ளனர். டி.டி.வி.தினகரனைச் சார்ந்தவர்களே ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள். ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். இதற்கு முன்பும் என்மேல் அவதூறு பரப்ப இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல' என அவர் கூறினார்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வெற்றிவேல், ‘அமைச்சர் ஜெயக்குமார் இப்படிப்பட்ட பிரச்னைகளில் ஈடுபடக் கூடியவர் தான். இது குறித்து உண்மையறிய கர்ப்பமான பெண்ணின் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும். அதை வைத்து ஜெயக்குமாருக்கும் அந்தக் குழந்தைக்கும் ரத்த சம்பந்தம் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமாரை பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

.