This Article is From Jul 29, 2019

முத்தலாக் விவகாரம்: அதிமுக இரட்டை வேடம் போடுகிறது; டிடிவி தினகரன்

முத்தலாக் மசோதாவில் தமிழக அரசின் நிலைப்பாட்டை இஸ்லாமியர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்.

முத்தலாக் விவகாரம்: அதிமுக இரட்டை வேடம் போடுகிறது; டிடிவி தினகரன்

முத்தலாக் மசோதா விவகாரத்தில், அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த தேனி தொகுதி எம்.பி.,யும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இந்த மசோதா மூலம், சமூகத்தில், பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கும், சமூகத்தில் பெரிய பதவிகளை அடைவதற்கும், பிரதமர் முயற்சி எடுத்துள்ளார். 

தற்போது, மதங்களை தாண்டி, பெண்களுக்கு சம உரிமை வழங்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது. சமூக சடங்குகளை பெண்கள் மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும் முத்தலாக் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, முத்தலாக் விவகாரத்தில், ஜெயலலிதா ஏற்கனவே ஒருநிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. 

ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் தொடர்வதில் தெளிவாக உள்ளோம். முத்தலாக்' தடை சட்டம் தொடர்பாக, லோக்சபாவில், எங்கள் கட்சி எம்.பி., ஒரு கருத்து கூறியுள்ளார். ராஜ்யசபாவில், கட்சியின் முடிவு எதிரொலிக்கும். லோக்சபா எம்.பி., பேசியது குறித்து, கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

இந்நிலையில், இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, முத்தலாக் மசோதாவில் தமிழக அரசின் நிலைப்பாட்டை இஸ்லாமியர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். அதிமுக அரசின் செயல்கள் முரண்பாடாக உள்ளன. அதன் தலைமையும் முரண்பாடாகத்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. 

மத்திய அரசு தலைமையின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு முகமை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசு தூண்டுதலில் செயல்படக்கூடாது. தமிழக அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். 

மத்திய அரசு நிதியை திருப்பி அனுப்புவதன் மூலம் தமிழக அரசின் மோசமான செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வேலூர் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறினார்.

.