This Article is From Feb 12, 2019

‘குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர்..!’- திண்டுக்கல் சீனிவாசன் திடுக் தகவல்

திண்டுக்கல் சீனிவாசன், ‘எம்.ஜி.ஆர் அவர்கள், முன்னர் இருந்த ஆட்சியை குறை சொல்லியே ஆட்சியைப் பிடித்தவர்’ என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்

‘குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர்..!’- திண்டுக்கல் சீனிவாசன் திடுக் தகவல்

எம்.ஜி.ஆர் அவர்கள், தனக்கு முன்னர் இருந்த ஆட்சியை குறை சொல்லியே முதல்வர் ஆனவர், திண்டுக்கல் சீனிவாசன்

ஹைலைட்ஸ்

  • திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் இப்படி பேசியுள்ளார்
  • கல்வித் துறை குறித்தும் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்
  • அமைச்சர் பேசியது, கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது

தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘எம்.ஜி.ஆர் அவர்கள், முன்னர் இருந்த ஆட்சியை குறை சொல்லியே ஆட்சியைப் பிடித்தவர்' என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சீனிவாசன் உரையாற்றும்போது, ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எப்படி ஆட்சியைப் பிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆண்டாண்டு காலமாக ஏழைகள் எப்படி இருக்கிறார்கள். அடிமைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை திரைப்படம் மூலம் மக்களுக்கு காண்பித்தார். அத்தோடு நின்று விடாமல் மக்களைத் திரட்டினார். புரட்சி செய்தார். ஆட்சியைப் பிடித்தார்.

எம்.ஜி.ஆர் அவர்கள், தனக்கு முன்னர் இருந்த ஆட்சியை குறை சொல்லியே முதல்வர் ஆனவர். அவர் வழியைத்தான் புரட்சித் தலைவர் ஜெயலலிதாவும் பின்பற்றினார்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் இந்தப் பேச்சால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அவர் தொடர்ந்து, ‘இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 28 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதால்தான் இப்படியொரு நிதியை அதிமுக அரசு ஒதுக்கியுள்ளது' என்றார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 28,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் அமைச்சர் தவறுதலாக 28 லட்சம் என்று குறிப்பிட்டார்.

.