This Article is From Dec 13, 2018

‘5 மாநில தேர்தலில் பின்னடைவு இல்லை!’- பாஜக-வுக்கு எடப்பாடி சப்போர்ட்

ஆயிரம் வாக்குகளில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது

‘5 மாநில தேர்தலில் பின்னடைவு இல்லை!’- பாஜக-வுக்கு எடப்பாடி சப்போர்ட்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பற்றி பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தேர்தலில் பின்னடைவோ, முன்னடைவோ கிடையாது' என்று பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘5 மாநில தேர்தல் முடிவில் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டும். 5 மாநில தேர்தலில் பின்னடைவு முன்னடைவு என்ற பேச்சில்லை. வாக்குகளில் பெரிய வித்தியாசமில்லை. ஆயிரம் வாக்குகளில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை' என்றார்.

மேகதாது விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய முதல்வர், ‘ஒவ்வொரு முறையும் அணை கட்டும்போதும் கர்நாடகா, தமிழகத்துக்கு பாதிப்பு வராது என்று கூறுகின்றது. கபிணி அணை கட்டினார்கள். 19 டிஎம்சி தண்ணீர் சேமித்துவிட்டனர். ஹேமாவதி அணை கட்டினர், 32 டிஎம்சி தண்ணீர் சேமித்துவிட்டனர். இப்படி ஒவ்வொரு அணை கட்டும் போதும், நமது எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

அதே நேரத்தில் அணை கட்டாத இடங்களில், நமக்குத் தங்கு தடையில்லாமல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையை கட்டி கட்டி, நமக்குத் தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் அதை வழங்காமல் அதைத் தேக்கி, தமிழகத்தைப் பாலைவனமாக காட்சியளிக்கும் விதத்தில் மாற்றியுள்ளனர்' என்று கூறினார்.

.