
JEE மற்றும் NEET: COVID-19 க்கு இடையில் மாணவர்களின் கவலைகளை மத்திய அரசு கேட்க வேண்டும் என்றார் சோனியா காந்தி
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 34 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்தி அரசு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில், "அரசாங்கத்தின் தோல்விகள்" காரணமாக நீட்-ஜேஇஇ தேர்வு எழுதுபவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கூடாது என காங்கிரசின் முன்னால் தலைவரான ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து, தற்போது அக்கட்சியின் தலைவரான சோனியா காந்தியும், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மாணவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டுமென தற்போது கோரியுள்ளார்.
தொற்றுநோய் சரியான கட்டுப்பாட்டில் இருக்கும் வரை தேர்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்திற்கு செல்வது குறித்து காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் பரிசீலித்துள்ளன.
“என் அன்பான மாணவர்களே, நீங்கள் இப்போது மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதை நான் உணர்கின்றேன். தேர்வு குறித்த கவலை என்பது, தனியொரு மாணவனுக்கு மட்டுமல்லாது அவர்கள் சார்ந்துள்ள குடும்பத்திற்குமானதாக உள்ளது.” என சோனியா வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
Students are our future, we depend on them to build a better India, therefore, if any decision has to be taken regarding their future it is important that it is taken with their concurrence.: Congress President Smt. Sonia Gandhi #SpeakUpForStudentSafetypic.twitter.com/Jf18cmykbd
— Congress (@INCIndia) August 28, 2020
“நீங்கள் எங்கள் எதிர்காலம். ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் உங்களைச் சார்ந்து இருக்கிறோம். எனவே, உங்கள் எதிர்காலம் குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்பட வேண்டுமானால், அது உங்கள் ஒப்புதலுடன் எடுக்கப்படுவது முக்கியம். அரசாங்கம் உங்கள் பேச்சைக் கேட்கிறது என நாங்கள் நம்புகின்றோம். உங்களுடைய விருப்பப்படி அரசு செயல்பட வேண்டுமென்பது எங்களது யோசனையாக உள்ளது. இது அரசாங்கத்திற்கு எனது ஆலோசனை. நன்றி. ஜெய் ஹிந்த்.” என அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஆகியவை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
நாட்டின் எதிர்க் கட்சிகள் எதிர்த்து வரக்கூடிய நிலையிலும், மத்திய அரசு தேர்வினை நடத்துவதில் உறுதியுடன் உள்ளது. முன்னதாக, கடந்த வாரம் டிடி செய்தி சேனலுக்கு பேட்டியளித்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், JEE தேர்வுக்கான ஹால் டிக்கட்டுகளை ஏற்கெனவே 80 சதவிகித மாணவர்கள் பெற்றுவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.