This Article is From Jun 27, 2019

சென்னை மக்களின் தாகம் போக்க, ‘தீர்க்கதரிசியாய்’ திகழுமா ஆவடி ஏரி; விரிவான அலசல்!

வறட்சி குறித்து அரசு தரப்போ, “அதிக வெயில், பொய்த்த மழை ஆகியவையே காரணம்” என்று காரணம் சொல்கிறது. 

சென்னை மக்களின் தாகம் போக்க, ‘தீர்க்கதரிசியாய்’ திகழுமா ஆவடி ஏரி; விரிவான அலசல்!

ஏரி குறித்து இப்படி பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், அது உடனடியாக மக்களுக்கு வழங்கப்படப் போவதில்லை. காரணம், மனிதர்கள் பயன்படுத்தும் அளவுக்கு அதன் சுகாதாரம் இல்லை. 

Chennai:

சென்னை நகரின் நீர் ஆதரமாய் விளங்கும் 4 ஏரிகள் வறண்டு கிடக்கும் நிலையில், ஆவடியில் இருக்கும் ஓர் ஏரி மட்டும் நகரவாசிகளுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் இருக்கிறது. 

85 ஏக்கரில் அமைந்துள்ள பரதப்பட்டு ஏரி, சென்ற ஆண்டு வரை கழிவுநீர் கலக்கும் நீர்நிலையாய் இருந்தது. தற்போது அந்த ஏரி முழுவதுமாக சுத்தப்படுத்தப்பட்டு, புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது. 28 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த ஏரி, தற்போது 12 ஆடி ஆழத்துக்கு நீரை சுமந்து நிர்கிறது. பரதப்பட்டு ஏரியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 500 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

35 கோடி ரூபாயில் ஆவடி முனிசிபாலிட்டி ஒரு புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. அதன்படி, அடுத்த வாரத்தில் இருந்து, ஏரியின் கரையில் உள்ள சுத்திகரிப்பு ஆலை, கழிவுநீரை சுத்தமாக்கி, ஏரியில் விடும். இதன் மூலம் நீர் அளவு மேலும் அதிகரிக்க உள்ளது. இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர், தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கும் விற்கப்பட உள்ளன. 

இந்தத் திட்டத்திற்கு மூளையாக இருந்தவர் ஆவடி தொகுதியின் எம்.எல்.ஏ-வும், தமிழக கலாசாரத் துறை அமைச்சருமான மாஃபா.பாண்டியராஜன்.

“ஒரு நீர்நிலையை எப்படி புனரமைப்பது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆவடி, ஓர் ஏரி நகரம் போன்றது. இதைப் போன்று 15 ஏரிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இந்த அனைத்து ஏரிகளும் புனரமைக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றை விரைவில் இணைப்போம்” என்று பெருமிதத்தோடு  NDTV-யிடம் பகிர்கிறார் பாண்டியராஜன். 
 

r7duqu8

ஏரி குறித்து இப்படி பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், அது உடனடியாக மக்களுக்கு வழங்கப்படப் போவதில்லை. காரணம், மனிதர்கள் பயன்படுத்தும் அளவுக்கு அதன் சுகாதாரம் இல்லை. 

“மக்கள் இந்த ஏரி நீரைப் பயன்படுத்த, அதன் தரம் இன்னும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு பல திட்டங்களை அடுத்தடுத்து அமல் செய்ய உள்ளோம்” என்று பிரச்னை குறித்து விளக்குகிறார் பாண்டியராஜன். 

மற்ற ஏரிகளில் என்ன பிரச்னை?

சென்னையில் இருக்கும் மற்ற ஏரிகளில் நீர் வறண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கும் வகையில் ஐரோப்பிய விண்வெளி மையம், படங்களை வெளியிட்டுள்ளன. அதன் மூலம் சென்னையின் மிகப் பெரிய நீர் ஆதரமாக விளங்கும் புழல் ஏரி, பிப்ரவரி முதல் ஜூன் வரை எப்படி வறண்டு போகிறது என்பதைப் பார்க்க முடியும். 
 

e7prf16o

வறட்சி குறித்து அரசு தரப்போ, “அதிக வெயில், பொய்த்த மழை ஆகியவையே காரணம்” என்று காரணம் சொல்கிறது. 

ஆனால், வல்லுநர்களோ, “கண் மூடித்தனமாக நிலத்தடி நீர் உரிஞ்சப்பட்டது, சகட்டு மேனிக்கு போர்வெல் போட அனுமதி கொடுத்தது, ஊழல் உள்ளிட்டவைதான் தற்போது நீரின்றி தவிப்பதற்குக் காரணம்” என்று குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து சூழலியல் செயல்பாட்டளாரான அருண் கிருஷ்ணமூர்த்தி, “2000 ஆம் ஆண்டுகளின் போது, மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்பது கட்டாயம் என்ற நிலை இருந்தது. அந்தத் திட்டத்தை மீண்டும் மாநில அரசு அமல் செய்ய வேண்டிய சூழல் நெருங்கிவிட்டது.

போர்வெல் மூலம் மட்டும் அனைவரும் நீரைப் பெறக் கூடாது. இன்னும் சொல்லப் போனால், இனி அப்படி நீர் எடுக்க அனுமதி கொடுக்கப்படக் கூடாது. எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோம் என்பது குறித்து ஓர் அளவு இருக்க வேண்டும். அதற்கு அளக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீரை சேமிப்பது மற்றும் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது பெருமளவு அமல் செய்யப்பட வேண்டும்” என்று விளக்குகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அறிக்கை, “10 கோடி பேருக்கு மேல் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை அதிகம் பெய்யாத காரணத்தால் தமிழகம் மற்றும் ஆந்திரா, அபாயக் கட்டத்தில் இருக்கின்றன” என்று கூறுகிறது.

ஆவடி ஏரியால், இப்போதைக்குச் சென்னையில் நீர் பிரச்னையைத் தீர்க்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் சென்னையின் தாகத்தைக் குறிப்பிடத்தகும் அளவுக்கு அதனால் தீர்க்க வாய்ப்புள்ளது.

.