ராணா கபூர் கைது செய்யப்பட்டிருப்பது தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக இருக்கிறது.
யெஸ் வங்கிக் கடன் உயர்வுக்குப் பின்னால் பாஜகவின் நிதியமைச்சகம் இருப்பதாகப் பரவலாகச் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், DHFL நிறுவனத்துக்கு யெஸ் வங்கியின் மூலம் மூவாயிரத்து 700 கோடி ரூபாய்க் கடன் வழங்குவதற்காக, அந்நிறுவனத்திடம் இருந்து 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் ராணா கபூரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் DHFL நிறுவனத்தின் உரிமையாளர் வதாவன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி கூறியதாவது, "நரேந்திர மோடி ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே வங்கிக் கொள்ளைகள் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட யெஸ் வங்கி, ஆரம்பத்தில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. அதன் காரணமாகவே தனியார் துறை வங்கிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் யெஸ் வங்கி இடம் பெற்றிருந்தது. ஏனைய பொதுத்துறை நிறுவனங்கள் பெரு முதலாளிகளுக்குக் கடனை வாரி இறைத்து வாராக் கடன் என்ற படுகுழியில் விழுந்ததைப் போல யெஸ் வங்கியும் கடனை வாரி இறைத்து படுபாதாளத்தில் விழுந்துள்ளது.
யெஸ் வங்கியின் செயல்பாடுகள் தள்ளாடுவதை முன்னரே கவனித்து உரியக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இந்திய ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் பின்னணியில்தான் முன்னெச்சரிக்கையாகத் திருப்பதி தேவஸ்தானம் யெஸ் வங்கியிலிருந்து தனது முதலீட்டை எடுத்துக்கொண்டது.
யெஸ் வங்கியில் ஏற்பட்ட பிரச்சினை இன்றைக்கு, நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த மார்ச் 2014 ஆம் ஆண்டில் யெஸ் வங்கி வழங்கிய மொத்தக் கடன் ரூபாய் 55 ஆயிரத்து 633 கோடிதான். ஆனால், அது திடீரென கடந்த மார்ச் 2019 இல் ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரத்து 499 கோடியாக உயர்ந்திருக்கிறது. மோடியின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது ஏன்? பண மதிப்பு நீக்கத்தின்போது, மார்ச் 2016 இல் கடன் தொகை ரூபாய் 98 ஆயிரத்து 210 கோடியாக இருந்தது. மார்ச் 2019 இல் ரூபாய் 2 லட்சத்து 3 ஆயிரத்து 543 கோடியாக எப்படி உயர்ந்தது? ஏன் உயர்ந்தது? இந்தக் கடன் உயர்வுக்குப் பின்னால் பாஜகவின் நிதியமைச்சகம் இருப்பதாகப் பரவலான சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.
இவை தீவிர பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டிருப்பது தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக இருக்கிறது.
எனவே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மக்களின் சொத்து. மக்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைப்புத் தொகையாக வங்கிகளில் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் மத்திய பாஜக அரசிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுகிற வகையில் மத்திய பாஜக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து எவராலும் காப்பாற்ற முடியாது" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.