This Article is From Feb 18, 2019

காஷ்மீர் தீவிரவாதிகளின் அடுத்த அட்டாக்! – 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

புல்வாமாவில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த சோகம் தீர்வதற்கு முன்பாக அடுத்த தாக்குதலை தீவிரவாதிகள் தொடர்ந்துள்ளனர்.

காஷ்மீர் தீவிரவாதிகளின் அடுத்த அட்டாக்! – 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • நள்ளிரவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
  • ஒரு அதிகாரி உள்பட 4 வீரர்கள் உயிரிழப்பு
  • ராணுவத்தின் தேடுதல் வேட்டை தொடர்கிறது
Pulwama:

ஜம்மு காஷ்மீரில் அடுத்த அட்டாக்கை தீவிரவாதிகள் செய்து முடித்துள்ளனர். புல்வாமாவின் பிங்லான் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட மொத்தம் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நள்ளிரவில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவம் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. சண்டை முடிந்து விட்டதாகவும், தேடுதல் வேட்டை மட்டும் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிங்லான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வீரர்கள் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவின்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர்.

இதற்கு ராணுவம் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருப்பினும் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட மொத்தம் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் நடவடிக்கை

பாகிஸ்தானின் தூண்டுதல் பேரில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கடந்த வியாழன் அன்று தாக்குதல் நடத்தினர். இதில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்க வரி விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகின்றனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை இதுவரைக்கும் 40 நாடுகள் கண்டித்துள்ளன. இந்தியாவுக்கு இது முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.

நேற்று ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

.