குஜராத்தின் ‘சர் க்ரீக்’ என்று சொல்லப்படும் இடத்திற்கு அருகில் ஆள் இல்லாத படகுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை செய்துள்ளது ராணுவம்.
Pune: தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கைத் தகவல் கொடுத்துள்ளது இந்திய ராணுவத் தரப்பு. குஜராத்தின் ‘சர் க்ரீக்' என்று சொல்லப்படும் இடத்திற்கு அருகில் ஆள் இல்லாத படகுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை செய்துள்ளது ராணுவம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த கமாண்டோஸ் சிலர், குஜராத் கடல் மார்க்கமாக வந்து நாட்டிற்கு எதிராக தீவிரவாத தாக்குதலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ‘தென்னிந்தியாவுக்கு டெரர் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
“தென்னிந்தியாவில் தீவிரவாத தக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. சர் க்ரீக் பகுதியிலிருந்து ஆளற்ற படகுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதை மனதில் வைத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று தெற்கு கமாண்டின், ஜி.ஓ.சி, எஸ்.கே.சைனி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குஜராத்தில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடலோர காவல் படை, பாகிஸ்தான் கமாண்டோஸ் கட்ச் வளைகுடா மூலம் நுழைந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் தாக்குதல் நடத்தும் வகையில் அவர்களுக்குப் பயிற்சி இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்த்ரா துறைமுகத்தில் இருக்கும் அனைத்து கப்பல்களும், பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்னர்தான் கடற்படையின் தலைமை அட்மிரல், கரம்பீர் சிங், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடல் மார்க்க தாக்குதலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக பரபரப்புத் தகவலை தெரிவித்தார்.
கடந்த மாதம் இந்திய அரசு, காஷ்மீர் சிறப்பு சட்ட அந்தஸ்தை ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அப்போதிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உரசல் போக்கு நிலவி வருகிறது. சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் விவகாரம் குறித்து தொடர்ந்து பிரச்னை எழுப்பி வருகிறது பாகிஸ்தான் அரசு தரப்பு. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு தரப்பு, ‘காஷ்மீர், எங்களின் உள்விவகாரம்' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ANI தகவல்களுடன் எழுதப்பட்டது