This Article is From Jun 01, 2020

தெலங்கானாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவலை

ஞாயிற்றுக் கிழமை அதிகரித்த எண்ணிக்கையால் ஒட்டுமொத்த பாதிப்பு தெலங்கானாவில் 2,698 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 82 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவலை

ஒரே நாளில் 199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது குறித்து, அம்மாநில கவர்னரும் தமிழகத்தை சேர்ந்தவருமான தமிழிசை சவுந்தர ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெலங்கானா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், ஒரே நாளில் பாதிப்பு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 2 மூத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட 199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக் கிழமை அதிகரித்த எண்ணிக்கையால் ஒட்டுமொத்த பாதிப்பு தெலங்கானாவில் 2,698 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 82 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உயர்ந்திருப்பது குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரே நாளில் 199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் என கொரோனா எதிர்ப்பு களத்தில் முன்னிற்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் பாதிப்பு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும் அச்சப்படத் தேவையில்லை. பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

.