This Article is From Sep 04, 2018

ஆசிரியர் தின சிறப்பு: யார் இந்த சர்வபள்ளி இராதகிருஷ்ணன்?

நண்பனாக, வழிகாட்டியாக இருந்து ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, என்று அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்றுத்தருவது ஆசிரியர்கள்

ஆசிரியர் தின சிறப்பு: யார் இந்த சர்வபள்ளி இராதகிருஷ்ணன்?
New Delhi:

நண்பனாக, வழிகாட்டியாக இருந்து ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, என்று அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்றுத்தருவது ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5 ஆம் தேதி ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

ஆசிரியராகப் பணியாற்றி, குடியரசுத் தலைவர் பதவிவரை உயர்ந்து, தான் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்த டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி 'ஆசிரியர் தினமாக' இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பாரம்பரியம் கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1888 ஆம் ஆண்டு, திருத்தணியில் பிறந்த இராதாகிருஷ்ணன், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். திருத்தணியில் ஆரம்பக் கல்வியையும், திருப்பதியில் பட்டப்படிப்பும் பயின்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

ஆசிரியர் பணியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் பேராசிரியராக பணியாற்றினார். அதன் பின்னர், ஆந்திர பல்கலைக்கழகம், பனராஸ் இந்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான 'பாரத் ரத்னா' விருதை முதல்முறையாகப் பெற்று புகழ் சேர்த்தார். மேலும், நோபல் பரிசுக்காக 27 முறை இராதாகிருஷ்ணனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தத்துவ மேதையாகவும், ஞானியாகவும் திகழ்ந்து, இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க மேதையாக விளங்கிய டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆசிரியர் தினத்தன்று, கற்பித்து, ஊக்கமளித்து நமக்கு உதவியாய் இருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம்!

.