This Article is From Apr 29, 2019

12ஆம் வகுப்பை தொடர்ந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்திலும் திருப்பூர் முதலிடம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 2019ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தில் 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற்றது.

12ஆம் வகுப்பை தொடர்ந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்திலும் திருப்பூர் முதலிடம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், 92.48 அரசுப்பள்ளிகள் தேர்ச்சியடைந்துள்ளன. மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்திலும் முதலிடம் பிடித்துள்ளது.

12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஏப்.19ஆம் தேதி வெளியானது. அதில், 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதிலும், மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதேபோல், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது.

இந்நிலையில், இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும், திருப்பூர் மாவட்டம் 98.53 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக இராமநாதபுரம் மாவட்டம் 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மூன்றாவதாக நாமக்கல் மாவட்டம் 98.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில், 86.10 சதவீத தேர்ச்சியுடன் திருவள்ளூர் மாவட்டம் கடைசி இடம்பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் மற்றும் 38ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை,

tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.