This Article is From Aug 10, 2020

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம்; 5,177 பேரின் நிலை என்ன?

10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 9,45,006 மாணக்கர்கள் விண்ணப்பித்திருந்தனர். 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி  என்று அறிவிக்கப்பட்டது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம்; 5,177 பேரின் நிலை என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்தானது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. அடுத்தடுத்த மாதங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தள்ளிப்போனது. 

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 9,45,006 மாணக்கர்கள் விண்ணப்பித்திருந்தனர். 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி  என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 9,39,839 பேரின் முடிவுகள் மட்டுமே இன்று வெளியாகியுள்ளது. 

மீதமுள்ள 5,177 பேரின் தேர்ச்சி முடிவுகள் குறித்த விவரம் வெளிவரவில்லை. இதனால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் இந்த மாணவர்கள் எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால், பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடந்திருந்தால் அவர்கள் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருப்பார்கள். 

ஒட்டுமொத்தமாக 10ம் வகுப்புக்கு தேர்வு நடக்காத நிலையில், அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் அடுத்து என்ன மேல்படிப்பை தொடரலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது 5,177 பேரின் முடிவுகள் வெளிவராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதிப்பெண் விவரங்கள் மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளிகளில் நேரில் சென்றும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தேர்வாணைய இணையதளமான, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.