'டாஸ்மாக்கை திறக்கக்கோரி மேல்முறையீடு செய்யக்கூடாது' - தமிழக அரசுக்கு SDPI வலியுறுத்தல்

''நீதிமன்றத்தின் தடை உத்தரவு கோடிக்கணக்கான மக்களின் கோரிக்கையாகும். அதனை அரசு ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். ஆனால், அந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடுக்கு தமிழக அரசு செல்வது ஏற்புடையதல்ல''

'டாஸ்மாக்கை திறக்கக்கோரி மேல்முறையீடு செய்யக்கூடாது' - தமிழக அரசுக்கு SDPI வலியுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பல்வேறு எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன.

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்று, எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது, உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்கு ஒன்றில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத சூழலில் சமூக இடைவெளியும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதும் மட்டும்தான் நோய்ப் பரவலை தடுக்க முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தும் நிலையில், மதுக்கடைகளை திறக்கும் அரசின் முடிவால் அந்த அறிவுறுத்தல்கள் காற்றில் பறந்துபோகும் என்றும், ஊரடங்கால் வருமானமின்றி தவித்துவரும் ஏழை-எளிய மக்கள் சொல்லொன்னா துன்பங்களை சந்திக்க நேரிடும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். அதுபோலவே, டாஸ்மாக் கடையை திறந்த முதல் நாளன்றே சமூக இடைவெளி கேள்விக்குறியானதோடு, விபத்துக்களும், குடும்ப வன்முறைகளும் பல இடங்களில் நடந்தேறின.

இந்நிலையில், நீதிமன்றம் அளித்துள்ள தடை உத்தரவு வரவேற்கத்தக்கது.  நீதிமன்றத்தின் தடை உத்தரவு கோடிக்கணக்கான மக்களின் கோரிக்கையாகும். அதனை அரசு ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். ஆனால், அந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடுக்கு தமிழக அரசு செல்வது ஏற்புடையதல்ல.

Newsbeep

பொருளாதார ஈட்டலை விட மக்கள் நலனே முக்கியம் என தெரிவித்து மதுக்கடையை திறக்க அனுமதி மறுத்துள்ள கேரள அரசைப் போல தமிழக அரசும் மக்கள் நலனுக்கு எது உகந்ததோ அதனை ஏற்று செயல்படுத்துவது தான் சிறந்ததாக இருக்கும்.

ஆகவே, உயர்நீதிமன்றத்தின் டாஸ்மாக் தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்ற மேல்முறையீடுக்கு செல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.