This Article is From May 14, 2020

'கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து அச்சப்பட வேண்டாம்'- மருத்துவ நிபுணர்கள் குழு விளக்கம்

பணியிடங்களில் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். மாஸ்க் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். பணியிடங்களில் யாருக்கேனும் அறிகுறி தென்பட்டால் அவர்கள் பணிக்கு செல்லாமல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

'கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து அச்சப்பட வேண்டாம்'- மருத்துவ நிபுணர்கள் குழு விளக்கம்

பாதிப்புகளை அதிகம் கண்டறிவதன் மூலம் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பு குறித்து நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை
  • பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை :நிபுணர்கள் குழு
  • மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நிபுணர்கள் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், கொரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு, சிறப்பு மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்தியது. இதில் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மருத்துவக்குழுவினர் கூறியதாவது-

அதிக சோதனைகள் நடத்தப்படுவதால்தான் எந்தப் பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோதனைகளை குறைக்கக் கூடாதென பரிந்துரை செய்துள்ளோம். 

பாதிப்பு எவ்வளவு அதிகரித்தாலும் சோதனைகள் அதிகரிப்பதை நிறுத்தி விடக்கூடாது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். பாதிக்கப்பட்டோரை அதிகபட்சமாக  3 நாட்களில் கண்டுபிடித்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட வேண்டும். பாதிப்பை சீக்கிரம் கண்டுபிடிப்பதால் உயிரிழப்பு தமிழகத்தில் குறைவாக உள்ளது. 

கண்காணிப்பு, சோதனை, பாதிப்புகளை தடம் அறிதல், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை தொடர்ந்து செய்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். 

பாதிப்பை உயர்வை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினாலே போதுமானது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவை.

பணியிடங்களில் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். மாஸ்க் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். பணியிடங்களில் யாருக்கேனும் அறிகுறி தென்பட்டால் அவர்கள் பணிக்கு செல்லாமல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

படிப்படியாகத்தான் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும். வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தமிழர்கள் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் மருந்து சாப்பிடுபவர்கள், நீண்ட நாட்கள் பாதிப்பு உள்ளவர்களுக்குத்தான் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இதைய முதல்வரிடம் தெரிவித்தோம். 

பாதிப்புகளை அதிகம் கண்டறிவதன் மூலம் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசு அளிக்கும் சுகாதார பைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

.